வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
கு. அஜ்மல்கான் May 24, 2026 04:14 PM

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன் கொடுமை

தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.  இதுதமிழக சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது. குறிப்பாக  மகளிர் பாதுகாப்பு என்ற பிரச்சாரம் முக்கிய இடத்தை பிடித்திருந்தது.  சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் சார்பாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது.

அந்த வகையில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய்யும், பெண் பாதுகாப்பு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தவெக ஆட்சி அமைந்த நிலையில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறியது. அந்த வகையில் கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் சிறுமி வீட்டின் அருகில் வசித்து வந்தவரே சிறுமியை கொடூரமாக கொலை செய்தது  நாடு முழுவதும் அதிர்வலையை உருவாக்கியது. 

கோவை சிறுமி கொலை- அமைச்சர் கீர்த்தனா பதில்

இந்த நிலையில் கோவை சிறுமி கொலை தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிவகாசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற அமைச்சர் எஸ். கீர்த்தனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் தற்போது நிர்வாக ரீதியாக மட்டும் பேசுவோம் என பதிலளித்தார். இருந்த போதும் செய்தியாளர்கள் அரசியல் தொடர்பாக கேள்வி கேட்கவில்லை. நீங்களும் ஒரு பெண் தான். எனவே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் இதனை எப்படி பார்க்குறீங்க என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைவர் என்ன முடிவெடுத்தாலும் சரியாக இருக்கும் என சம்பந்தம் இல்லாத வகையில் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆன நிலையில், நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். 

குறிப்பாக சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார் பெண் அமைச்சர் என்ற ரீதியில் உரிய பதில் அளித்திருக்கலாம். ஆனால் எதுவும் சொல்லாமல் சென்றது ஏன் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கீர்த்தனா ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்று தற்போது பதில் அளிக்காமல சென்ற வீடியோவுடன் இணைந்து வெளியிட்டு வருகின்றனர். அதில் பெண்ணை அடிமை செய்கின்ற (திமுக) ஆட்சி தேவையா.? என மக்கள் யோசிக்க வேண்டும், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும், விசில் வெற்றி பெற வேண்டும் என  என ஆவேசமாக பேசிய வீடியோவை வைத்து  அமைச்சர் கீர்த்தனாவை விமர்சித்து வருகிறார்கள். 

சிரித்தது ஏன்.? அமைச்சர் விளக்கம்

இந்த நிலையில் கோவை சிறுமி கொலை தொடர்பாக படுகொலை தொடர்பாகவும், சிரித்தது ஏன் எனவும்  அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.  அதில்,  தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்தை முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியே வந்தபோது, கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் இயல்பாக நான் சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.
10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தில், மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

அதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது. எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.