ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு எங்களையே மிரட்டுறீங்களா? காங்கிரஸாருக்கு எதிராக திரண்ட திமுகவினர்! சீர்காழியில் பரபரப்பு‌...
எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை May 24, 2026 04:44 PM

சீர்காழி: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி (SC/ST) பிரிவு சார்பில் திமுக தீர்மான நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு திமுகவினரும் திரண்டதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், மோதல் சூழலும் ஏற்பட்டு ஒட்டுமொத்தப் பகுதியும் பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது.

மோதலுக்குக் காரணமான திமுக இளைஞரணியின் தீர்மானம்

சென்னையில் அண்மையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கடுமையான கண்டன தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், "கடந்த பல தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு, பல்வேறு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற கட்சி காங்கிரஸ். நடந்து முடிந்த தேர்தலிலும் கூட, திமுகவினரின் இரத்த வேர்வை மற்றும் கடுமையான உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களையும், ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் பெற்றது.

ஆனால், எவ்வித நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அவர்கள் அணி மாறிச் சென்றுவிட்டனர். இன்று திமுகவுக்குச் செய்த துரோகத்தை, நாளை அவர்களுக்குப் பதவி கொடுத்த புதிய கூட்டாளிகளுக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் ‘அறிவாளிகள்’ தான் காங்கிரஸார்" என திமுக இளைஞரணி கூட்டத்தில் மிகக் கடுமையான வார்த்தைகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

சீர்காழியில் கொதித்தெழுந்த காங்கிரஸ்; தீர்மான நகல் எரிப்பு

தங்கள் தேசியத் தலைவர் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து திமுக இளைஞரணி நிறைவேற்றிய இந்தத் தீர்மான நகலை எரிக்கும் போராட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு அறிவித்தது.

அதன்படி, சீர்காழியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவின் தலைவர் கிள்ளிவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் குரு, மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் சிவராமன், வட்டாரச் செயலாளர் பிரபு, இளைஞர் அணி துணைத்தலைவர் சிரஞ்சீவி மற்றும் முக்கிய நிர்வாகிகளான அறிவழகன், சுரேஷ், முரளி உள்ளிட்ட திரளான காங்கிரஸ் தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் திமுகவிற்கு எதிராகவும், திமுக இளைஞரணி செயலாளரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் மிகக் கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

"திமுகவின் உழைப்பால் மட்டும் காங்கிரஸ் ஜெயிக்கவில்லை" என ஆக்ரோஷமாக முழக்கமிட்டபடி, திமுக இளைஞரணியின் தீர்மான நகலை நடுரோட்டில் வைத்து தீயிட்டுக் கொளுத்தி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

ஸ்பாட்டுக்கு வந்த திமுக: நடுரோட்டில் வெடித்த மோதல்!

காங்கிரஸார் தங்களது கட்சித் தலைமையையும், உதயநிதி ஸ்டாலினையும் கண்டித்து முழக்கமிட்டு, தீர்மான நகலை எரிக்கும் தகவல் சீர்காழி நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளுக்கு எட்டியது. இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். 

காங்கிரஸ் கட்சியினரை நோக்கி பாய்ந்த திமுகவினர்

"ஊருக்கு நாலு பேர் கூட இல்லாத நீங்களா எங்களை எதிர்க்கிறீர்கள்? எங்களது உழைப்பில், வெற்றி பெற்றுவிட்டு, இன்று எங்களையே எதிர்த்து கோஷம் போடுகிறீர்களா?" எனக் கூறி நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் மூண்டது. 

போலீஸ் அதிரடி நடவடிக்கை - அசம்பாவிதம் தவிர்ப்பு

சம்பவ இடத்தின் விபரீதத்தை உணர்ந்த சீர்காழி காவல் நிலையப் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இருகட்சியினரும் கலைந்து போக செய்தனர். திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.

போலீஸாரின் உடனடித் தலையீட்டினால் பெரும் அசம்பாவிதங்களும், அடிதடி மோதல்களும் தவிர்க்கப்பட்டன. இருப்பினும், நேற்று வரை அண்ணன்-தம்பியாகக் கைகோர்த்துத் தேர்தலைச் சந்தித்த திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் இன்று சீர்காழி வீதிகளில் நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.