மே 24, 2026: பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகரில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், 71 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நேரத்தில் இந்த சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானிலிருந்து பலூசிஸ்தான் பகுதியை பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் ஆயுத அமைப்பான பலூச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
ரயில் நிலையம் அருகே நடந்த தற்கொலை படை தாக்குதல்:முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டுகளை சுமந்து வந்த நபர் ரயில் நிலைய நுழைவுப் பகுதியில் தன்னைத் தானே வெடிக்கச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவசர மீட்பு பணியாளர் முகமது ஜீஷான் கூறுகையில், இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பின் தன்மை மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
23 பேர் உயிரிழ்ப்பு, 71 பேர் படுகாயம்:மீட்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது, சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காயமடைந்த 71 பேர் குவெட்டா நகரிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
இதன் காரணமாக குவெட்டா நகரிலுள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவசர சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடரும் மீட்பு பணிகள்:குவெட்டா நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் காதிர் கம்ப்ரானி கூறுகையில், “உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் சரியான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: வேகமாக பரவும் எபோலா வைரஸ்.. அவசரநிலை அறிவித்த உலக சுகாதார அமைப்பு.. எந்தெந்த நாடுகளுக்கு ஆபத்து ?
பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகராக குவெட்டா திகழ்கிறது. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக் குழுக்களின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, பலூச் விடுதலை ராணுவம் (BLA) கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புப் படைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திலும் பலூசிஸ்தான் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களுக்கு BLA பொறுப்பேற்றிருந்தது. அப்போது நடந்த தாக்குதல்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.