“டிரம்ப் ஒன்னும் அப்படி சொல்லல”.. சோசியல் மீடியா முட்டாள்தனத்தை நம்பாதீங்க.. இந்தியாவுக்கு சப்போர்ட் செய்த அமெரிக்க அமைச்சர்..!!!
SeithiSolai Tamil May 27, 2026 12:48 AM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிறப்புரிமை குடியுரிமைக்கு எதிரான ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் இந்தியாவை ‘நரகக்குழி’ (Hellhole) என்று விமர்சிக்கும் வரிகள் இடம் பெற்றிருந்ததால், அது உலகளவில் பெரும் சர்ச்சையையும் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்த விவகாரம் குறித்துப் பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.

டிரம்ப் இந்தியாவை மிகவும் நேசிப்பவர் என்றும், அவர் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய ரசிகர் என்றும் ரூபியோ விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் தங்களுக்குத் தோன்றிய முட்டாள்தனமான கருத்துக்களைப் பதிவிடுவது வழக்கம் என்றும், அந்தப் குறிப்பிட்ட பதிவு டிரம்பின் சொந்தக் கருத்து அல்ல, அது ஒரு டொராடோ ரேடியோ தொகுப்பாளரின் ஆடியோ பதிவு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

டிரம்பின் அந்த ஒற்றைப் பகிர்வை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை எடைபோடக் கூடாது என்று கூறிய மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நட்பு மிகவும் பலமானது மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி நிகழ்ச்சியின் போது அதிபர் டிரம்ப் திடீரென போன் செய்து, “நான் பிரதமர் மோடியை நேசிக்கிறேன், இந்தியா எனக்கு 100 சதவீதம் முக்கியமான நாடு” என்று பேசியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிரம்பின் இந்த அதிரடி போன் காலின் மூலம், இந்தியா மீதான அவரது உண்மையான அன்பும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறைவிடாத நட்புறவும் மீண்டும் நிரூபணமாகி இருப்பதாக ரூபியோ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.