தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) அடுத்தடுத்த பலத்த அதிர்ச்சிகள் காத்துள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெகவில் (தமிழக வெற்றி கழகம்) ஐக்கியமான நிலையில், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் சபாநாயகரை நேரில் சந்தித்து தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்களை தகுதி நீக்கம் செய்ய சதி செய்வதாகவும், அதற்கு பயந்து நாங்கள் ஓடமாட்டோம் என்றும் சவால் விட்டுப் பேசிய இசக்கி சுப்பையா, தொகுதி மக்களின் நலனுக்காகவும், முதலமைச்சர் விஜய்யின் நல்லாட்சியை ஆதரிப்பதற்காகவுமே தவெகவில் இணைந்ததாக ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்களை முடக்க நினைத்த இபிஎஸ்-ஸின் கணக்குகளை தவிடுபொடியாக்கும் வகையில், இந்த எம்.எல்.ஏக்கள் முன்கூட்டியே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர்.
இசக்கி சுப்பையாவின் இந்த அதிரடி முடிவால் அம்பாசமுத்திரம் தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் வரவிருப்பது உறுதியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைப் போக்கால் அதிருப்தியடைந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவது போல அதிமுகவின் கோட்டை சரிந்து வருவதால், தவெகவின் இந்த அசுர வேக அரசியல் ஆட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிமுக தலைமை தற்போது கடுமையான அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.