உஷார்... இப்படியெல்லாம் கூட நடக்குது... ஏடிஎம்-மில் உதவி செய்வது போல் நடித்து பண மோசடி!
Dinamaalai May 27, 2026 01:48 AM

 பீகார் மாநிலம் பேகுசாராய் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்  மையம் ஒன்றில், உதவி செய்வது போல நடித்து அரங்கேற்றப்பட்ட ஒரு நூதனப் பண மோசடிச் சம்பவம் சாமானிய பொதுமக்களிடையே மாபெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது அவசரத் தேவைக்காகப் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணுக்குப் பணம் எடுக்க உதவி செய்வது போல மிகவும் கனிவாக நடித்துள்ளார். அந்தப் பெண்ணின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரது ஏடிஎம் கார்டை இயந்திரத்தின் உள்ளேயே திட்டமிட்டுச் சிக்க வைத்துள்ளார்.

கார்டு வராததால் அந்தப் பெண் செய்வதறியாது பதற்றமடைந்திருந்த நேரத்தைப் பயன்படுத்திய அந்த மோசடி நபர், "நான் கார்டை மீட்டுத் தருகிறேன்" என்று நம்பும்படியாகக் கூறி, அவரிடமிருந்து ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை சாதுரியமாகப் பெற்றுள்ளார். பின்னர் கார்டு இன்னும் வரவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து நைசாக நழுவியுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே, அந்தப் பெண்ணின் வங்கித் கணக்கிலிருந்து ரூ.22,500 திருடப்பட்டதாக அவரது மொபைல் போனுக்கு அவசரக் குறுஞ்செய்தி   வந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து  உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள அந்தப் பலே திருடனைப் போர்க்கால அடிப்படையில் தேடி வருகின்றனர். அந்நிய நபர்களிடம் ஏடிஎம் ரகசிய எண்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம் எனப் போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.