20 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கினோம்..அபூர்வ சகோதரர்கள் பற்றி கமல்ஹாசன் தகவல்
ராகேஷ் தாரா June 07, 2026 05:44 PM

மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசா ராவ் இயக்கியுள்ள சிங் கீதம் திரைப்படம் வரும் ஜூன் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்வில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தங்களது அபூர்வ சகோதரர்கள் படம் குறித்து அவர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். 

தமிழில் ராஜ பார்வை , அபூர்வ சகோதரர்கள் , மைக்கெல் மதன காமர ராஜன் ஆகிய படங்களை இயக்கியவர் சிங்கீத சீனிவாச ராவ் . தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் தற்போது தனது 61 ஆவது படமாக சிங் கீதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஃபேன்டஸி காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. அயன், அஹல்யா பாம்ரூ மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 11 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

அபூர்வ சகோதரர்கள் பற்றி

சிங் கீதம் பட நிகழ்வில் பேசிய கமல் " 1957-ல், ஏப்ரல் 12 அன்று 'மாயாபஜார்' வெளியானது. இப்போது 'சிங் கீதம்' ஜூன் 11 அன்று வெளியீட்டிற்குத் தயாராகிறது. அவருக்கு இது வெறும் 2 மாத கால இடைவெளி போல் தான் தெரியும். வயது என்பது ஒரு எண் மட்டுமே. என்னுடைய 21 வயதில் நான் சிங்கீதம் இயக்கும் படத்தை தயாரித்து அந்த படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை செய்தேன். அப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாள் இரண்டு கதைகளை பற்றி பேசினோம். அதில் ஒரு கதைதான் இப்போது அவர் இயக்கியிருக்கும் இந்த படம். சில கதைகள் காலம் கடந்தவை .
 
'புஷ்பக விமானம்' படத்தில் சிங்கிதம் சீனிவாச ராவ் சாருடன் பணியாற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முழுப் படமும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் ஏசி ரூமில்  படமாக்கப்பட்டது.  அந்த படப்பிடிப்பின் போது பல் தேய்ப்பது , குளித்துவிட்டு ஒத்திகை பார்ப்பது பிறகு நடிப்பது மட்டும் தான். அந்த காலத்தை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். கடும் நெருக்கடிக்கு மத்தியில்  'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கினோம். அந்த படம்  தான் 720P தரத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம். இன்றும் நான் அவருடைய உதவியாளராக வேலை செய்ய விரும்புகிறேன். சினிமா என்பது முதலில் லட்சியம் அதன் பின்னர் தான் பிஸ்னஸ். ஆனால் இன்று நாம் பிஸ்னசை தான் முதலில் பார்க்கிறோம். லட்சியம் முக்கியம் என்று நினைத்ததால்  தான் எங்க்ளால் 15 லட்சத்தில் ஒரு படத்தை அன்று எடுக்க முடிந்தது.
 
'புஷ்பக விமானம்' இன்று வெளியிடப்பட்டிருந்தால், அது ₹200 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும். ஒரு படத்தின் வெற்றியையோ தோல்வியையோ யாராலும் கணிக்க முடியாது. ஒரு சிறந்த யோசனையுடன் தொடங்கும் ஒவ்வொரு படமும் ஒரு நல்ல படமே. அந்த படம் முடியும் போது நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போமா என்பது மட்டுமே எங்களுக்கு முக்கியமாக இருந்தது. அப்படி உருவான படம் தான் அபூர்வ சகோதரர்கள். அந்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு காட்சிகளை அழித்துவிட்டோம்.  அந்த படம் நிச்சயம் தோல்வியடையும் என்று எங்களுக்கு தெரிந்ததும் நாங்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம். அதற்காக நாங்கள் இருவரும் பலருக்கு பதில் சொல்ல வேண்டியது. ஆனால் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். " என கமல் தெரிவித்துள்ளார்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.