முதலமைச்சர் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு படம் உருப்படியாக நடிக்கவில்லை என விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வீடியோ ஒன்றின் மூலம் தவெகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சரானார். இந்த தேர்தலில் தவெகவின் வெற்றி என்பது திமுக, அதிமுக என்ற ஆண்ட கட்சிகளை அலற வைத்தது. அதேசமயம் விஜய் ரசிகர்களையும் சேர்த்து இளைஞர் பட்டாள வாக்குகளை கடந்த 10 ஆண்டுகளாக பெற்று வந்த நாம் தமிழர் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் விஜய் மீது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கோபத்தில் உள்ளார். தனது பேட்டிகள், மேடை நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜயை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், “உங்களை மக்கள் தேர்வு செய்ததற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம். சினிமாவில் நடித்ததை தவிர வேறு ஏதாவது காரணம் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். 69 படத்தில் ஒரு படம் கூட நல்ல படம் இல்லை. இந்த மக்கள் நல்ல படம் தராதவனை நல்லாட்சி தருவான் என நம்புகிறார்கள். ரஜினிகாந்துக்கு சொல்லிக்கொள்ள 50 படம், கமல்ஹாசனுக்கு 100 படம், எம்ஜிஆருக்கு ஒழுக்கம், தாயைப் போற்றுவது, பெண்களை மதிப்பது, மது அருந்த மாட்டேன் என வலியுறுத்த 200 பாட்டுகள் இருக்கிறது. ஆனால் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து தனலட்சுமி விரும்புச்சுன்னு நீ பாட்டு பாடிட்டு திரியுற.. இதில் கோவப்படுவதற்கு என்ன இருக்கிறது சிஎம் சார்?” என நிகழ்ச்சி ஒன்றில் சீமான் விமர்சித்திருந்தார்.
இதனிடையே, ஒரு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சீமான் பங்கேறிருப்பார். அப்போது அவரிடன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், விஜய் நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்ற கேள்வியை கேட்பார்கள். அதற்கு, “விஜய் நடித்ததில் மெர்சல் படம் பிடித்தது. அதேபோல் பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணை வாசலில் உட்கார்ந்து பேசி வெளியே வரவைக்கும் அந்த காட்சி எனக்கு எப்போதும் பிடிக்கும்” என தெரிவித்திருப்பார். இந்த வீடியோ இப்போது விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் சீமான் ஒருபோதும் ஒரே மாதிரியான கருத்தில் உடன்பட மாட்டார். ஒருமுறை தம்பி விஜய் என்பார், மறுபுறம் ஒரு படம் கூட உருப்படியா நடிக்கலையான்னு கேட்பார். அதைப் பற்றி கேட்டால் என் தம்பியை விமர்சிக்க உரிமை இல்லையா என அதனை மடைமாற்ற முயற்சிப்பார் என தவெகவினர் கடுப்பாகியுள்ளனர்.