அம்மாவின் இறுதி சடங்கை முடித்து ஐரோப்பா சென்ற அஜித்..ரசிகர்கள் அதிருப்தி
ராகேஷ் தாரா June 08, 2026 07:44 PM

நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. அண்மையில் தனது தாயாரை இழந்த அஜித், அவரது இறுதிச்சடங்குகளை  நிறைவு செய்த பிறகு மீண்டும் தனது ரேஸிங் பணிகளுக்குத் திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித் குமார், திரைப்படங்களை விட தற்போது ரேஸிங் தொடர்பான செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. தாயாரின் மறைவு காரணமாக சில நாட்கள் பொது நிகழ்வுகளில் இருந்து விலகியிருந்த அவர், பின்னர் தனது ரேஸிங் நிறுவனத்தின் பணிகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்

அஜித்தின் 64 ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் அஜித்தின் சம்பளத் தொகை காரணமாக படத்திற்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க சில கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும், புதிதாக தயாரிப்பு துறையில் களமிறங்க விரும்பும் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்காக அஜித்திற்கு ரூ185 கோடி சம்பளம் தர இந்த நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால் தனது  சம்பளத் தொகையை துபாயில் உள்ள அவரது கணக்கில் செலுத்த வேண்டும் என்ற விருப்பத்தை அஜித் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான நடைமுறைகள் மற்றும் நிதி சார்ந்த செயல்முறைகள் சில தயாரிப்பாளர்களுக்கு சவாலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், .எல். விஜய், சிறுத்தை சிவா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோருடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதாக அஜித் ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எந்த இயக்குநரின் படம் முதலில் தொடங்கும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.

அஜித் தற்போது தனது ரேஸிங் இலக்குகள் மற்றும் சர்வதேச போட்டிகள் மீதான கவனத்தைத் தொடர்ந்து செலுத்தி வருவதால், அவரது அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில காலம் தாமதமாகலாம் என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், அவரை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவரது புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் கேள்வியாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.