30 ஆண்டுகள் நீண்ட அவதூறு வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ராகேஷ் தாரா June 08, 2026 07:44 PM

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சுகன்யா தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. நடிகைக்கு எதிராக ஒளிபரப்பப்பட்ட சர்ச்சைக்குரிய தகவல்களால் அவரது நற்பெயர் பாதிக்கப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10,00,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது.

1990களில் பல வெற்றிப் படங்களில் நடித்த சுகன்யா, தனது நடிப்பு திறமையாலும் பரதநாட்டியக் கலைஞராகவும் தனித்த அடையாளம் பெற்றவர். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் சின்ன கவுண்டர், மகாநதி, வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிச்சாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

1996 ஆம் ஆண்டு சந்தன மர கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த வீரப்பனை நக்கீரன் இதழின் ஆசிரியர் ஆர்.ஆர். கோபால் நேர்காணல் செய்திருந்தார். அந்த நேர்காணலின் ஒரு பகுதியில், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அவர்களின் மகனுடன் சுகன்யாவுக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக வீரப்பன் கூறியதாக ஒளிபரப்பானது. இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவை தனது கண்ணியத்தையும் தொழில்வாய்ப்புகளையும் பாதித்ததாகவும் சுகன்யா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம், ஒளிபரப்பப்படும் தகவல்களை சரிபார்க்கும் பொறுப்பு ஊடக நிறுவனங்களுக்கே இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், நிகழ்ச்சியைத் திருத்தவும், தேவையற்ற பகுதிகளை நீக்கவும் அதிகாரம் இருந்தபோதும் அவதூறான தகவல்கள் ஒளிபரப்பப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, சுகன்யாவுக்கு வழங்கப்பட்ட ரூ.10,00,500 இழப்பீட்டுத் தொகையை உறுதிப்படுத்தியதோடு, அந்த அவதூறான பகுதியை மீண்டும் வெளியிடவோ ஒளிபரப்பவோ கூடாது என்ற நிரந்தரத் தடையையும் நீதிமன்றம் தொடரச் செய்துள்ளது. இந்த தீர்ப்பு, ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.