'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஸ்ரீராம் ஆராவமுதன் June 08, 2026 08:44 PM

இஸ்ரேலும், ஈரானும் மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஆனால், சண்டையை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இரு நாடுகளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிறிது நேரத்திற்கு முன் அவர் ஒரு பதிவை போட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் ஒரு முக்கிய பதிவை போட்டள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஈரான் அதிபர் கூறியது என்ன.?

ஈரான் தனது தேசிய நலன்களை தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், எந்த அச்சுறுத்தல்களுக்கும் பின்வாங்காது என்றும் கூறியுள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், நாடு ராஜதந்திரத்திற்கு உறுதியுடன் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பெஷெஷ்கியன், ஈரானின் முன்னுரிமை அதன் மக்களின் பாதுகாப்பும் அமைதியுமே என்று கூறியுள்ளார். ராஜதந்திரமும் பாதுகாப்பும் தேசிய சக்தியின் இன்றியமையாத தூண்கள் என்று அவர் வலியுறுத்தியதோடு, ஈரான் போர்க்களத்தையோ பேச்சுவார்த்தை மேசையையோ கைவிடவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாடு மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஈரான் அதிபர், ஒற்றுமையும் பகுத்தறிவும் ஈரான் எதிர்கொள்ளும் சவால்களை கடக்க உதவும் என்றும் கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவது என்ன.?

முன்னதாக, சில நாட்களுக்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டார்.

மூன்று மாத கால மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு, புதிய ராணுவ நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்து, மேலும் பதற்றம் அதிகரிப்பதை தடுக்க அவர் திரைமறைவில் செயல்பட்டு வருவதாக வரும் செய்திகளுக்கு மத்தியில் ட்ரம்ப்பின் இந்த பதிவு வந்துள்ளது.

அதற்கும் முன்னதாக, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில், அதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறிய ட்ரம்ப், இஸ்ரேல் ராணுவ ரீதியான பதிலடியைத் தொடங்காது என நம்பிக்கை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நீடித்து வரும் மோதல் சுழற்சியை, மேற்கொண்டு எடுக்கப்படும் எந்தவொரு பதிலடியும் மேலும் நீட்டிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், நேற்று பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களையும் அமெரிக்க அதிபர் விமர்சித்தார். மேலும், அந்தத் தாக்குதல்கள் குறித்து தமக்கு மகிழ்ச்சியில்லை என்றும் கூறினார். இத்தகைய சூழலில், ஈரான் பதிலளித்துவிட்ட நிலையில், இப்போது இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது என்பதே இங்கு பெரிய கேள்வியாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.