ஸ்கூல் திறந்த முதல் நாளே பயங்கரம்…! “குலுங்கிய கட்டிடம்”… அழுது கதறி துடித்த குழந்தைகள்… போராடி மீட்ட ஆசிரியர்கள்… நடுங்க வைக்கும் வீடியோ…!!
SeithiSolai Tamil June 08, 2026 08:48 PM

பிலிப்பைன்ஸ் நாட்டில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் ‘மலீட்டா’ பகுதியில் உள்ள மகாயகாய் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் போது வகுப்பறைகள் பயங்கரமாக குலுங்கியதால், உள்ளே இருந்த பள்ளிக்குழந்தைகள் மரண பயத்தில் அலறித் துடித்து, அழுதுகொண்டே வெளியே ஓடி வரும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆசிரியர்கள் குழந்தைகளை சமாதானப்படுத்தி, பாதுகாப்பான திறந்தவெளி மைதானத்திற்கு அழைத்துச் செல்ல போராடிய காட்சிகள் பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

 

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:07 மணிக்கு, பூமிக்கு அடியில் 93 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் பதிவாகியுள்ளது. இந்த பயங்கரம் நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே, 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நில அதிர்வும் ஏற்பட்டு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியது. நிலநடுக்கத்தின் வீரியத்தால் 37 வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்கள் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட அதிர்வைத் தொடர்ந்து, பிற்பகல் வரை சுமார் 138-க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால், மக்கள் யாரும் சேதமடைந்த கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.