உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் காணிக்கை மற்றும் நன்கொடை முறைகேடு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுப் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி நட்ட புனித 'பாரிஜாத மரம்' காணாமல் போயுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் முறையாகக் கையாளப்படாமல், அதில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அனூப் பிரகாஷ் அவஸ்தி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், கோயில் நன்கொடைகள் முறைகேடாகக் கையாளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட வேண்டும். மேலும், மத்திய புலனாய்வு அமைப்பு போன்ற சுதந்திரமான முகமையைக் கொண்டு, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட உத்தரவிட வேண்டும்.
பக்தர்கள் வழங்கும் கோடிக்கணக்கான நன்கொடைகளின் வசூல், அதன் கணக்குப்பதிவு, பாதுகாப்பு மற்றும் செலவினங்கள் ஆகியவை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்குத் தொடர்ச்சியான நீதித்துறை கண்காணிப்பு அமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காணிக்கை முறைகேடு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியியல் சர்ச்சை ஒருபுறம் இருக்க, தற்போது ஆன்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றொரு விவாதம் கிளம்பியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோயில் பூமி பூஜையின் போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கோயில் வளாகத்தில் ஒரு புனித 'பாரிஜாத மரம்' நட்டு வைக்கப்பட்டது.
பக்தர்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படும் பாரிஜாத மரம், தற்போது இருந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பிரதமர் நட்ட மரம் என்பதால் அதற்குப் பலத்த பாதுகாப்பும், முறையான பராமரிப்பும் வழங்கப்பட்டு வந்த சூழலில், அது எப்படிக் காணாமல் போனது? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதா? என்பது குறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தரப்பிலிருந்து இதுவரை முறையான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.