முதலீட்டாளரிடம் லஞ்ச கேட்டதாக புகாரில்லை.. முதலீட்டை ஈர்ப்பதில் அசத்தல்.. திமுக அரசை பாராட்டி தள்ளிய ஆந்திரா அமைச்சர்!
TV9 Tamil News June 24, 2026 01:48 AM

தமிழக சட்டப்பேரவையில் தொழில் முதலீடுகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் இடையே விவாதம் நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு வர வேண்டிய பல்வேறு முக்கிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன் வைத்தார். அத்துடன் தற்போதைய ஆட்சி நிர்வாக முதலீடுகளை ஈர்ப்பதிலும், தக்க வைப்பதிலும் திறம்பட செயல்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தவெக அரசு பொறுப்பேற்ற 40 நாட்களில் எந்த ஒரு நிறுவனமும் தமிழகத்தை விட்டு வெளியேறவில்லை என்றும் முந்தைய திமுக ஆட்சியில் நிலவிய ஊழல் காரணமாகவே பல நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வரவேண்டிய 25 தொழில் முதலீடுகள் ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம்- ஆந்திரா போட்டி

மேலும், கடந்த 2024- ஆம் ஆண்டில் மட்டும் ஏராளமான முதலீடுகள் வரவில்லை. இதன் காரணமாக தமிழக அரசுக்கு சுமார் ரூ.3.3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெரும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மனித வளம் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா  லோகேஷ் மாநிலங்களுக்கு இடையேயான முதலீட்டு போட்டிகள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அரசியல் களம் எவ்வளவு கடுமையானது. முதலீடுகளை ஈர்ப்பதில் கடந்த திமுக அரசுடன் ஆந்திரா அரசு கடுமையாக போட்டியிட்டது.

மேலும் படிக்க: செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை? முதல்வர் விஜய்யை குறிப்பிட்டு உதயநிதி கடும் விமர்சனம்!

லஞ்சம் கேட்டதாக திமுக அரசு மீது புகார் தெரிவிக்கவில்லை

இதில், சில முதலீடுகளை நாங்கள் வென்றோம். சிலவற்றை இழந்துள்ளோம். கடந்த திமுக அரசின் முதலீட்டு நடைமுறைகள் குறித்து கூறுகையில் கடந்த தமிழக அரசு லஞ்சம் கேட்பதாக எந்த நிறுவனத்தின் முதலீட்டாளரும் புகார் தெரிவித்ததாக நான் கேள்விப்படவில்லை. பாராட்டுக்குரிய விஷயங்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். மிகவும் தூய்மையான மற்றும் தொழில் முறை சார்ந்த முதலீட்டு நடைமுறையே பின்பற்றியது திமுக அரசு. அதனை மிகவும் பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார்.

அமைச்சரின் கருத்துக்கு பதில் விமர்சனம்

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் கருத்துக்கு முன்னாள் தொழில்துறை அமைச்சரான டி. ஆர். பி. ராஜா கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ரீல்ஸ் மூலம் தொழில் முதலீடுகளை சீர்குலைக்கும் வேலைகளில் தவெக அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். தற்போது, ஆந்திர மாநில அமைச்சர் கடந்த திமுக அரசை பாராட்டி இருப்பது கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க : தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.