தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று , ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் எதிர்க்கட்சியான திமுகவிற்கு எதிராகப் பாய்ந்துள்ளார். தனது உரையின் நிறைவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பழைய சைகை ஒன்றை அவர் அவையில் நேரில் செய்து காட்டியதால் சட்டமன்ற வளாகமே அதிரும் அளவுக்குப் பெரும் பரபரப்பு நிலவியது.
தவெக அரசு திமுகவின் தயவில்தான் இயங்குகிறது என்ற விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலளித்த முதலமைச்சர் விஜய், "புதிதாக ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்; அவங்க தயவால்தான் நம்ம ஆட்சி நடக்கிறதாம். இந்த ஆட்சி உங்கள் தயவால் நடக்கவில்லை. மக்கள் தயவாலும், மனசாட்சி உள்ள சக்திகளின் ஆதரவாலும் நடந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சுயேச்சையாக முடிவெடுத்தே தங்களுக்கு ஆதரவு அளித்தன எனக் குறிப்பிட்ட அவர், "நாம் யாருடைய பி டீமும் கிடையாது; Purely Peoples Team" என்று அழுத்தமாக முழங்கினார்.
திமுகவின் சமூக நீதி முழக்கங்களை விமர்சித்த முதலமைச்சர், தனது அமைச்சரவையின் பிரதிநிதித்துவத்தை முன்வைத்துக் கடுமையான கேள்விகளை எழுப்பினார். "சமூக நீதி அரசு என்று மேடைகளில் சொன்னீர்களே, உங்கள் அமைச்சரவையில் எத்தனை பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்? ஆனால், எங்கள் தவெக ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் அண்ணல் அம்பேத்கரின் கனவு நிறைவேறியுள்ளது. இதுமட்டுமன்றி, எங்கள் அரசில் 4 பெண் அமைச்சர்களும் பொறுப்பில் உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?" என்று சாடினார்.
மாநிலத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்குக் கடந்த திமுக ஆட்சிக் காலத்தின் நிர்வாகக் கோளாறுகளே காரணம் என்று குற்றம் சாட்டினார். "இது மன்னர் ஆட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்களாட்சி. கடந்த ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியது யார்? முந்தைய நிர்வாகக் கோளாறுகளுக்கு இப்போதுதான் நாம் விடை கண்டு வருகிறோம். 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" என்று குறிப்பிட்ட அவர், கட்சி நிதி என்ற பெயரில் கடந்த ஆட்சியில் கொள்ளை நடந்ததாகவும், மக்கள் பணத்தைத் தொட்டவர்களை இந்த அரசு சும்மா விடாது என்றும் எச்சரித்தார்.

மத்திய அரசுடனான உறவு குறித்துப் பேசிய அவர், எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பும் ஆள் தான் இல்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமே தனது இலக்கு என்றும் கூறினார். அதேநேரம், நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றில் தவெக அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.
தனது பதிலுரையின் இறுதிப் பகுதியில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஒட்டுமொத்தமாக முறியடிக்கும் விதமாக, "Evils, Evils என்று Devils பேசக்கூடாது" என்று காரசாரமாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு சட்டசபையில் செய்த ஒரு குறிப்பிட்ட செய்கையை அவையில் அனைவர் முன்பும் செய்து காட்டினார். இதனால் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் கூச்சலும் வாக்குவாதமும் ஏற்பட்டு, சட்டமன்றமே தற்காலிகமாகப் பரபரப்பின் உச்சத்திற்குச் சென்றது.