கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
ராகேஷ் தாரா June 28, 2026 01:44 AM

தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையப்படுத்தி வரும் படங்களுக்கு எப்போதும் வரவேரற்பு இருந்து வருகிறது. சென்னை 28 , சரோரா ஆகிய படங்கள் இன்றும் பேசப்படுகின்றன. அந்த வகையில் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது மம்மட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரீஸ்.

சவிர் சுதாகர் இந்த தொடரை இயக்கியுள்ளார். எஸ். சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தத் தொடருக்கு சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலைசெல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ளனர்.  வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கடா பாலமுரளி, ஜகபர் சதிக், விவேக் பிரசன்னா, நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் சம்பத் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மம்மட்டியான் ஸ்டார்ஸ் விமர்சனம் 

கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் மூன்று நண்பர்கள், தங்களின் அபிமான வீரரின் கடைசி போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒரே கனவுடன் பயணிப்பதே மம்மட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரிஸின் மையக்கதை. அந்த டிக்கெட்டை பெற அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், நட்புக்குள் ஏற்படும் விரிசல்கள், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் ஆகியவற்றை கலகலப்பாகவும், எளிமையாகவும் சொல்ல முயற்சிக்கிறது இந்த தொடர்.

தொடரின் மிகப்பெரிய பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். வைப்பவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட சுப்ரமணியன் உள்ளிட்ட இளம் நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர். நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்கள் செயற்கைத்தனமாக இல்லாமல் இயல்பாக இருப்பதால், பார்வையாளர்கள் அவர்களுடன் எளிதாக ஒன்றிப்போக முடிகிறது. நகைச்சுவை நடிகர் நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் வரும் காட்சிகள் கதைக்கு சிறிய அளவில் சுவாரஸ்யத்தை சேர்க்கின்றன.

கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டும் காட்டாமல், ரசிகர்களின் உணர்வுகளுடன் இணைத்து சொல்ல முயற்சிப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக நண்பர்களின் பிணைப்பு, கனவை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள் போன்றவை சில இடங்களில் மனதைத் தொடுகின்றன. அதே நேரத்தில், சில திருப்பங்கள் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருப்பதும், திரைக்கதையில் பெரிய ஆச்சரியங்கள் இல்லாததும் சிறிய குறையாக தெரிகிறது.

தொழில்நுட்ப ரீதியாக தொடர் நேர்த்தியாக உள்ளது. ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை கதையின் மனநிலையை சரியாக வெளிப்படுத்துகின்றன. தேவையற்ற காட்சிகள் அதிகம் இல்லாததால் தொடர் விறுவிறுப்பை தக்கவைக்கிறது. அதேசமயம், கதாபாத்திரங்களின் பின்னணிக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் உணர்ச்சி தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், மம்மட்டியான் ஸ்டார்ஸ் ஒரு பெரிய திருப்பங்கள் நிறைந்த திரில்லர் அல்ல. ஆனால் நட்பு, கிரிக்கெட் மீதான பைத்தியம் மற்றும் இளமைக்கால கனவுகளை எளிமையாகச் சொல்லும் ஒரு லைட்-ஹார்ட்டட் ஃபீல்-குட் வெப் சீரிஸாக பார்க்கலாம். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், நண்பர்கள் மையமாக உருவாகும் கதைகளை விரும்புபவர்களுக்கும் இந்த தொடர் ஏமாற்றம் தராது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.