விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால் தமிழக முதல்வர் விஜயை சந்தித்தது குறித்தும் அவருடனான உரையாடல் குறித்தும் பகிர்ந்துகொண்டார். முதல்வர் விஜயை டார்லிங் என்று அழைத்ததாக விஷால் தெரிவித்துள்ளார்
நிகழ்வில் பேசிய விஷால் "முதலமைச்சர் அவர்களை எனக்கு கடந்த 30 ஆண்டுகளாக, அவரது முதல் படத்திலிருந்தே தெரியும், கல்லூரியில் அவர் என் அண்ணனுடன் படித்தவர், அப்போதிருந்து நான் அவரைச் சந்தித்து வருகிறேன், இப்போது அவர் முதலமைச்சரான பிறகு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோதும், அவரிடம் எந்த மாற்றமும் இல்லை,அதே நபர், அதே உடல்மொழி, அதே நல்ல குணம்; பதவி மட்டும்தான் மாறியிருக்கிறது, நான் விஜய்யிடம் பேசும்போது, 'சாரி டார்லிங்' என்று தான் சொன்னேன், ஒரு முதலமைச்சரை 'டார்லிங்' என்று கூப்பிடுவது எவ்வளவு நல்ல விஷயம் என்று நினைத்துப் பாருங்கள், ஒரு நண்பரிடம் பேசுவது போலவே இருந்தது, அந்தச் சூழலே மிகவும் அழகாக இருந்தது,
நான் அவரிடம், 'உங்களுக்குப் பூங்கொத்து கொடுப்பதற்குப் பதிலாக, உங்கள் பெயரில் மூன்று குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன்' என்று சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அதற்கு சம்மதித்தார், முதலமைச்சருக்குப் பூங்கொத்து கொடுக்காததன் மூலம் நான் மரபை மீறிவிட்டேன் என்பது உண்மைதான், ஆனால், அவர் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார், அது என்னுடைய பெருந்தன்மை அல்ல, அதை ஏற்றுக்கொண்ட அவருடைய பெருந்தன்மை, அவர் சம்மதித்ததில்தான் எனக்கு மகிழ்ச்சி, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இது நடந்திருக்காது !
அந்த மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த மூன்று வருடங்களுக்கு விஜய் பெயரில் படிக்கப் போகிறார்கள், முதலமைச்சரின் பெயரால் அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையப் போகிறது, அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அதே விஜய்தான் அவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடம் ஒரு கதை சொல்வதற்காக இதே இடத்திற்குச் சென்றிருந்தேன். அதே விஜய்யிடம் (நான் அவரை விஜய் என்று சொல்கிறேன், இப்போது அவர் முதலமைச்சர்) சென்று, 'கடந்த முறை நான் வந்தபோது கதை சொல்வதற்காக உங்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டது நினைவிருக்கிறதா?' என்று கேட்டேன். 'ஆமாம், ஆமாம், நினைவிருக்கிறது' என்றார், இப்போது நீங்கள் சினிமாவில் இல்லை என்பதால், நான் உங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன்' என்று சொன்னேன், அதற்கு விஜய் அவர்கள் சிரித்தார் !