2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்... கேரளாவில் மீண்டும் வலுக்கும் பருவமழை!
Dinamaalai June 29, 2026 03:48 PM

கேரளா மாநிலத்தில் சற்று ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகக் கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29 ஆம் தேதியான இன்று இந்த இரு மாவட்டங்கள் தவிர மாநிலத்தின் பிற 12 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர் மழையால் வெள்ள பாதிப்பு, போக்குவரத்து தடை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.