23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
க.சே.ரமணி பிரபா தேவி June 29, 2026 04:14 PM

தனியார் டே கேர் ஒன்றில் ஊழியர்களின் அலட்சியத்தால் 23 மாதக் குழந்தை ஒன்று, சக குழந்தையால் கடுமையாகத் தாக்கப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் daycare ஒன்றில் குழந்தைகள் தனித்துவிடப்பட்ட நிலையில், 2 வயது கூட நிரம்பாத 23 மாதக் குழந்தை, அருகில் இருந்த குழந்தையை கொடூரமாகத் தாக்கியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 3 குழந்தைகள் ஒன்றாக இருக்கின்றனர்.

கற்பனை செய்ய முடியாத அளவு கொடூரமான தாக்குதல்

அதில் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருக்கும் நிலையில், இன்னொரு குழந்தை அதனைத் தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருக்கிறது. 25 முறை கடுமையாகக் கடித்து வைத்துள்ளது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், கால்கள் என சரமாரியாக் கடித்துள்ளது.

அங்கிருந்த பொருட்களைக் கொண்டும் சம்பந்தப்பட்ட குழந்தையைத் தாக்கியுள்ளது. அருகில் இருந்த குழந்தை தடுக்க முயன்ற நிலையில், முடியவில்லை, சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் முயல அந்தக் குழந்தைக்கும் அடி விழுகிறது.

மனதைப் பிசையும் சிசிடிவி காட்சிகள்

அருகில் இருந்த குழந்தை கதவைத் திறக்க முயன்ற நிலையில், முடியவில்லை. தொடர்ச்சியாகத் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கும் சிசிடிவி காட்சிகள் மனதைப் பிசைகின்றன.

பணியாளர்கள் யாருமே அருகில் இருக்காத நிலையில், சுமார் 14 நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் நீடித்திருக்கிறது.  ஜூன் 22ஆம் தேதி காலை 11 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் இதுகுறித்து சில மணி நேரங்களுக்குப் பிறகே, குழந்தையின் பெற்றோரிடம் தகவல் சொல்லப்பட்டது. அதுவும் லேசாக , சிறியளவிலான காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அனுமதி

தொடர்ந்து இதுகுறித்துத் தகவல் அறிந்த குழந்தையின் பெற்றோர், உடனடியாகக் குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டேகேர் ஊழியர்க, சிஇஓ, மேலாளர், முதல்வர் மற்றும் கேர் டேக்கர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் ரூபாய் பேரம்

முன்னதாக காவல் துறையில் புகார் அளிக்காமல் இருக்க 10 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் 3 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல ’எங்களை உங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்று அராஜகமாகப் பேசியதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட டே கேர் நகராட்சி அனுமதி இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.