கரும்புச்சாறு விற்பனை..! “விலைப்பட்டியல் ஓகே தான்”… ஆனா அது என்ன ஐஸ் போட்டா 25 இல்லனா 30… கார்ப்பரேட்டுக்கே பாடம் எடுக்கிறாரு பா.. வாயடைத்துப் போன நெட்டிசன்ஸ்..!!
SeithiSolai Tamil June 29, 2026 10:48 PM

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கரும்புச் சாறு விற்கும் கடைக்காரர் ஒருவரின் விலைப்பட்டியல், வணிக தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் விதமாக அமைந்துள்ளது. அனன்யா நாரங் என்ற பயனர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த கரும்புச் சாறு கடையின் விலைப்பட்டியலில், ஐஸ் கட்டியுடன் கூடிய கரும்புச் சாறு 25 ரூபாய்க்கும், ஐஸ் கட்டி இல்லாத கரும்புச் சாறு 30 ரூபாய்க்கும், அரை கிளாஸ் கரும்புச் சாறு 20 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் பொருளாக ஐஸ் கட்டி சேர்க்கப்படும்போது விலை குறைவது ஏன் என்ற வாடிக்கையாளர்களின் பொதுவான வினாவிற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான வணிகக் கணக்கு ஒளிந்துள்ளது.

ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகளைப் போடும்போது, அது கிளாஸின் 25 முதல் 30 சதவீத இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் கடைக்காரர் குறைந்த அளவிலான கரும்புச் சாற்றை ஊற்றினால் போதுமானது; மேலும் கரும்புச் சாற்றை விட ஐஸ் கட்டியின் அடக்கவிலை மிகவும் குறைவு என்பதால் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவு குறைகிறது. இதற்கு நேர்மாறாக, ஒரு வாடிக்கையாளர் ஐஸ் கட்டி இல்லாமல் சாறு கேட்கும்போது, கடைக்காரர் 100 சதவீதம் தூய்மையான கரும்புச் சாற்றை முழுமையாக ஊற்ற வேண்டியுள்ளது.

இதில் மூலப்பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்டவே ஐஸ் கட்டி இல்லாத சாற்றிற்கு 5 ரூபாய் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு விலையுயர்ந்த பட்டப்படிப்பும் இல்லாமல், அன்றாட அனுபவத்தின் மூலமாகவே வாடிக்கையாளரையும் தயாரிப்பையும் புரிந்து கொண்டு இந்த வியாபாரி செய்துள்ள மேலாண்மை, பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த பாடம் என்று சமூக வலைதள நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.