அதிமுகவை அபகரிக்க ரகசிய திட்டம்.. ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய் மீது கடும் குற்றச்சாட்டு !
அருண் சின்னதுரை July 04, 2026 03:44 PM

அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது அதிமுகவை அபகரிக்க ரகசிய திட்டமே தவிர வேறொன்றும் இல்லை. - ஆர்.பி. உதயகுமார், குற்றச்சாட்டு 

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி, வாடிப்பட்டி அதிமுக தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் கே.கே.நகரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

விஜய் தான் உலகம் என்று 30 ஆண்டு காலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கின்ற ஆரம்பகால மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர்கள் தகுதியோடு, எதிர்பார்ப்புகளோடு  ஆர்வத்தோடு இருக்கிற போது அவர்களை எலலாம் தள்ளி வைத்துவிட்டு, த.வெ.கவில் அரசியலில் அடைக்கலம் தேடி வந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரி வாரி வழங்கி வள்ளலாக காட்சியளிக்கிற விஜய்யின் ரகசிய திட்டம் என்ன என்பது தெரியுமா?

 அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டும் அவருடைய எண்ணம் அல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்திலே அடுத்தடுத்து அரசியல் அதிகாரம் என்கிற அதிரடி ஆஃபர்களை அறிவித்து  54 ஆண்டு கால அதிமுக என்ற மாபெரும் மக்கள் சக்தி கொண்டிருக்கிற இயக்கத்திலே இப்போது ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றி வைத்து ராஜினாமா நாடகத்தை ஒவ்வொரு நாளும் நடத்திக் கொண்டிருக்கிற அந்த விபரீத விளையாட்டுகளை சந்தோஷமாக மனதுக்குள்ளே பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றார் விஜய்.

 விஜய்யின்  அதிரடி உத்தரவின் பேரில் பனையூரில் இன்றைக்கு சனிக்கிழமை  இணைப்பு விழாவில்  விஜய்யின் தலைமை ஏற்க பால்காவடி, பன்னீர் காவடி ,பறவை காவடி தூக்கிச் சென்றாலும் அங்கே வாசலிலே இவர்களை வரவேற்க ஒரு நாதி கூட இல்லை சரி வந்தது வந்து விட்டோம் ஆத்திர அவசரத்திற்கு நாம் கௌரவம் எல்லாம் பார்க்க கூடாது என்று பூட்டிய கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றால் அங்கே த.வெ.க கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யின் தரிசனமும் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை.

 பதவி ஆசையிலே, அதிகார ஆசையிலே அகதிகளாக த.வெ.க விற்க்கு செல்லுகிற அண்ணா திமுகவை அழிக்க நினைக்கிற சில பேருக்கு வழி கட்டுகிற விஜய்  அவர்களே உங்களுக்கும் தான் இந்த தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக சொல்லுகிறார். தூய சக்தி தூய சக்தி என்று இப்போது எல்லோரும் தூற்றுகிற சக்தியாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். போற்றுகிற சக்தியாக அவதாரம் எடுப்பீர்கள் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் ஆடுகிற அரசியல் ஆடு புலி ஆட்டம் தூற்றுகிற கட்சியாக நீங்கள் மெல்ல மெல்ல மாறிக் கண்டிருக்கிறீர்கள் பதவி கேட்டு உங்க வீட்டுக்கு திருவோடு ஏந்தி காத்து கிடக்கிற அந்த ஈனபிறவிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான் சொல்லுகிறோம். இந்த ஈனப் பொழப்பு பொழைப்பதை விட நாலு வீட்டில் பிச்சை எடுத்து வாழ்ந்துவிடலாம் என்பது தமிழ்நாடு மக்களின் எண்ணமாக உள்ளது" என கூறினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.