கொடூரம்... பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவன் லாரி மோதி தலை துண்டாகிப் பரிதாப பலி!
Dinamaalai July 04, 2026 03:48 PM

கர்நாடக மாநிலம் நவலகுந்து பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பக்கிரேஷ் என்ற மாணவர், அங்குள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இந்த மாணவர் நேற்று உப்பள்ளியில் இருந்து லட்சுமேஷ்வர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். பேருந்து லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மாணவருக்குத் திடீரென எச்சில் துப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் பேருந்தின் ஜன்னல் வழியாகத் தனது தலையை வெளியே நீட்டி எச்சில் துப்ப முயன்றுள்ளார். அந்தச் சமயத்தில் பேருந்திற்கு எதிரே மிக அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்தைக் கடந்து சென்றது. அப்போது லாரியின் பின்பகுதி ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்த மாணவனின் தலையில் மிக பயங்கரமாக மோதியதில், அவரது தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாகத் தனது உயிரை இழந்தார்.

பேருந்துக்குள் ரத்த வெள்ளத்தில் மாணவனின் உடல் கிடப்பதைக் கண்டு சக பயணிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்து அலறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், உயிரிழந்த மாணவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.