தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது என்ற காரணத்தால் தங்கத்தை அதிகளவு வாங்க மக்கள் விருப்பப்படுவார்கள். அதிலும் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே தங்கத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையும் கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது 2 லட்சத்தை கூட எட்ட வாய்ப்பிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர்.
டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கியதும் தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும் பங்கு சந்தையில் நிலையற்ற தன்மை காரணமாகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருப்பதால் தங்கத்தை அதிகளவு முதலீடு செய்யப்படுவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரிப்பால் தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
தங்கத்தின் விலையானது நேற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும். கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.