பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் மிக மோசமான வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விஷயம் அமைச்சரின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, இந்த அவதூறுப் பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. “பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது விரைவில் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் தரப்பில் மிகவும் காட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது சுய லாபத்திற்காகவும், அரசியல் உள்நோக்கத்தோடும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது இனி எந்தவித மென்போக்கும் காட்டப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை விளைவித்து, அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க முயலும் இந்த கும்பலை சைபர் க்ரைம் போலீசாரின் உதவியோடு கூண்டோடு பிடிக்கத் தயாராகி வருகின்றனர். விரைவில் இதற்கான சட்டப்பூர்வ புகார்கள் அளிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்கள் கம்பி எண்ணுவது உறுதி என அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.