சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
கு. அஜ்மல்கான் July 14, 2026 02:44 PM

திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்த தோல்வி

தமிழக சடமன்ற தேர்தல் முடிவு ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. தங்களுக்கு எதிராக பலமான எதிர்கட்சி இல்லை, ஈசியாக மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என திட்டமிட்ட திமுகவிற்கு அடிமேல் அடியாக திமுக தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுகவினரை அதிர வைத்துள்ளது. இது மட்டுமில்லாமல் ஈசியாக வெற்றி பெறலாம் என நினைத்த பல இடங்களிலும் படு தோல்வியை திமுக சந்தித்தது. இதனையடுத்து திமுகவை மறு சீரமைக்கும் நடவடிக்கையில் திமுக தலைமை களம் இறங்கியுள்ளது.

ஆய்வு செய்ய குழு அமைத்த திமுக

அந்த வகையில் திமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என கண்டறியும் வகையில், 36 பேர் கொண்ட 'உண்மை கண்டறியும் குழுவை திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்திருந்தார். அந்த குழு  தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தியது. இதில் கட்சி நிர்வாகிகள் மீது பல புகார்கள் கூறப்பட்டது. மேலும் மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை தேர்தலில் உள்ளடி வேலை பார்த்ததும் ஆவணங்களாக சமர்பிக்கப்பட்டது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் தொடர்பாகவும், ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 4 ஆம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார்.

மாவட்ட செயலாளர்கள் பதவியை பறிக்க திட்டம்

இதனையடுத்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக லண்டனில் தங்கியிருந்த ஸ்டாலின் திமுக ஆய்வு குழு கொடுத்த அறிக்கையை தினந்தோறும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து லண்டனில் இருந்து அறிவாலயத்தை தொடர்பு கொண்டு அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்

இதனையடுத்து வருகிற 18 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் திரும்பவுள்ளார். சென்னை வந்ததும் ஆய்வு குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திமுக மாநில, மாவட்ட மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கான பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற 20ஆம் தேதிக்கு பிறகு திமுகவில் மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய கழக நிர்வாகிகள் வரை பதவி பறிக்கப்படும் என அறிவாலய வட்டார தகவலாக உள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.