மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முகமாக விளங்கி, உலகளவில் கோடி கணக்கான ரசிகர்களின் மனங்களை ‘அயர்ன் மேன்’ கதாபாத்திரத்தின் மூலம் வென்றவர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர். 2019-இல் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்திற்குப் பிறகு, மார்வெல் படங்கள் மீதான ரசிகர்களின் வரவேற்பு சற்றே சரிவைக் கண்ட நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் மீண்டும் தனது பழைய ஆஸ்தான நடிகரைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளது.
ஆனால் இந்த முறை அவர் உலகத்தைக் காக்கும் ஹீரோவாக அல்லாமல், ‘டாக்டர் டூம்’ என்ற மெகா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே உலக அளவிலான சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.
அடுத்ததாக வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்’ ஆகிய இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களில் ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, ராபர்ட் டவுனி ஜூனியருக்குப் 100 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 950 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை சம்பளமாகவும் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமன்றி, அவருக்காகத் தனிப் பிரைவேட் ஜெட் வசதி, பிரத்யேகப் பாதுகாப்பு படை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான தனித் தங்கல் முகாம் உள்ளிட்ட பல ஆடம்பரச் சலுகைகளும் மார்வெல் நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளன.
கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான முதல் ‘அயர்ன் மேன்’ படத்தின் மூலம் மார்வெல் நிறுவனத்திற்குப் பல பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டிக் கொடுத்த ராபர்ட் டவுனி ஜூனியர், இதுவரை மார்வெல் படங்கள் மூலமாக மட்டுமே 500 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சம்பாதித்துள்ளார்.
தற்போது, ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் வெற்றி இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் மீண்டும் இயக்கும் இந்தப் புதிய பாகங்களில், ஆஸ்கர் விருதை வென்றுள்ள ராபர்ட் டவுனி ஜூனியர் வில்லனாக உருவெடுப்பது மார்வெல் சினிமா வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஹாலிவுட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நடிகருக்கு இவ்வளவு பிரம்மாண்டமான சம்பளம் வழங்கப்பட்டிருப்பது சினிமா வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.