’நீர்வளத்துறையிலும் Party Fund’ தீவிர விசாரணை ; சிக்கும் அதிகாரிகள்!
அரூபி July 29, 2026 07:44 PM

திமுக ஆட்சியில் Party Fund என்ற பெயரில் அரசின் வருமானங்கள் தனியாருக்கு சென்றதாக முதல்வர் விஜயே பேசியிருந்த நிலையில், டாஸ்மாக் துறையில் ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியிருக்கின்றனர். திமுக ஆட்சியில் எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெற்றது? கட்சி நிதி என்ற பெயரில் எந்தெந்த துறைகளில் இருந்தெல்லாம் பணம் சென்றது? என்பது குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் தனியாக ஒரு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் நிதித்துறை அமைச்சர் மரியவில்சனும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செந்தில்பாலாஜி கையாண்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை, மின்சார துறைகள் மட்டுமின்றி நீர்வளத்துறையிலும் Party Fund என்ற பெயரில் அதிகாரிகளே கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நீர்வளத்துறையில் நடந்தது என்ன ? லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை

நீர்வளத்துறையில் பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த பணத்தை அப்படியே ஒரு சில அதிகாரிகள் சுருட்டிவிட்டதாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக தீவிர விசாரணைக்கு முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பொறியாளர்கள் யார்?யார்? அவர்கள் மூலம் நடைபெற்ற டெண்டர்கள், பணி ஆணைகள், நிதி ஒதுக்கீடுகள், அவை பயன்படுத்த அளவுகள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள் – சத்தியபிரதா சாஹூ அதிரடி

நீர் வளத்துறையின் புதிய செயலாளராக சத்தியபிரதாசாஹூ பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமந்தப்பட்ட சென்னை தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், கண்காணிப்பு பொறியாளர்கள் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் மகேந்திரகுமார் உள்ளிட்டோரிடம் இருந்த முக்கிய பொறுப்புகளை பறித்து, அவர்களை திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பணியிட மாற்றமும் செய்தார். அவர்கள் திமுக ஆட்சியில் செயல்பட்ட விதம் குறித்தும் அவர்களது சொத்து உள்ளிட்ட விவரங்கள் பற்றியும் விரிவான விசாரணைக்கு துறை செயலாளர் சத்தியபிரதாசாஹூ உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் முக்கிய பொறுப்புக்கு வரத் துடிக்கும் பொ.பணித்திலகம் அணியினர்

இருந்தாலும், விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மணல் மாஃபியாக்கள் உதவியுடன், தவெக அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை பல்வேறு வழிகளில் பொதுப்பணித்திலகம் உள்ளிட்டோர் அணுகிவருவதாகவும், அதற்கு செவிசாய்க்காத அமைச்சர், சத்தியபிரதா சாஹு உள்ளிட்ட அதிகாரிகள் குறித்து பணியிடமாறுதலுக்கு பணம் பெறுவதாகவும் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் பொய்யான தகவல்களை அவர்கள் பரப்பிவருதாகவும் நீர்வளத்துறை பொறியாளர்கள் பேசி வருகின்றனர்.

தவெக ஆட்சி நடைமுறையை பாராட்டும் பொறியாளர்கள்

கடந்த ஆட்சியில் இருந்த அய்யா கலாச்சாரத்தை ஒழித்தும், பணியிடமாறுதலுக்கு பெரும் அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை நிறுத்தியும் வெளிப்படையாக பணியிட மாறுதல்கள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக, தகுதிவாய்ந்த பொறியாளர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுப்பதோடு பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு ஊழல் செய்து துறையை கெடுத்தவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் பொறியாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம்

இந்நிலையில், கடந்த ஆட்சியில் நீர்வளத்துறையில் பெருமளவில் பணம் கையாடல் செய்த பொறியாளர்களின் பட்டியலை எடுத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஏற்கனவே, சிலர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் உமாபதி மற்றும் அவருக்கு வலது கரமாக செயல்பட்ட பொதுப்பணித்திலகம், பாலாறு வடநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக இருந்த செல்வகுமார் உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். துரைமுருகனின் பெயரையும் அவரது உறவினர் என்று சொல்லியும், மீண்டும் திமுக-தான் ஆட்சிக்கு வாப்போகிறது என்று மிரட்டியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் குவாரி உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் பெரும் தொகையை வசூலித்த நீர்வளத்துறை பொறியாளர்களின் விவரம் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பான விரிவான விசாரணைக்கு நீர்வளத்துறை செயலாளர் உத்தரவிட்டிருப்பதாகவும்  தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாமல்லன் நீர் தேக்கத்தில் பெரும் ஊழல்

அதே நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் அவசர, அவசரமாக டெண்டர்விட்டு, அடிக்கல் நாட்டிய மாமல்லன் நீர் தேக்க நிதி ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், 342 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை டெண்டர் விட்டதில் கடந்த தேர்தலின்போது பெரும் தொகை கை மாறியிருப்பதாகவும் முதல்வர் அலுவலகத்திற்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றுள்ளன. உவர்நீர் ஈர நிலத்தை பற்றிய எந்த கவலையுமின்றி, மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் செயல்படுத்த முயற்சித்த இந்த திட்டம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும், என்றும் இதை விசாரித்தாலே பெரிய, பெரிய மீன்கள் சிக்குவார்கள் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.