ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் பயங்கரம்!
கிஷோர் August 22, 2026 10:14 PM

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆக்ராவிற்குச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றில், தலையன்றி சிதைந்த நிலையில் சிவப்பு நிற சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் பாகங்களை ரயில்வே ஊழியர்கள் கண்டெடுத்தனர். உத்தரப் பிரதேச அரசு ரயில்வே காவல்துறை தமிழ்நாட்டின் ரயில்வே காவல்துறையினரின் உதவியுடன் இந்த கொடூரக் கொலையின் விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

சிசிடிவி காட்சிகள் தந்த முக்கிய தடயம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும் பெண்ணும் அந்தச் சிவப்பு நிற சூட்கேஸுடன் ரயில் நிலையத்திற்குள் நுழைவதும், ரயிலில் சூட்கேஸை வைத்துவிட்டு அது புறப்படுவதற்கு முன்பே இறங்கிச் செல்வதும் பதிவாகியிருந்தது. தொடர்ந்து அவர்கள் சென்னை பார்க் ரயில் நிலையம் வரை நடந்து சென்று, அங்கிருந்து புறநகர் ரயிலில் ஏறி கூடுவாஞ்சேரியில் இறங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் தப்பிச் சென்றதை அறிந்த போலீசார், கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டைக் கண்டறிந்தனர்.

சமையல் பாத்திரத்தில் மனிதக் கறி: திடுக்கிடும் உண்மைகள்

கூடுவாஞ்சேரி போலீசார் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீடு முழுவதும் ரத்த வெள்ளமாகக் காட்சி அளித்ததோடு, கொலையாளிகள் உடலின் எலும்பு மற்றும் சதையைத் தனித்தனியாக வெட்டி, மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து பிரியாணி பாத்திரத்தில் (டபரா) போட்டு சமைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவ்வீட்டில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷா ஆகியோர் தங்கியிருந்தது உறுதியானது.

பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் ?

கொல்லப்பட்ட பெண் ஹைதுல் நிஷா என்பதும், அவர் தாம்பரம் மெப்ஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. கணவரைப் பிரிந்த அவர், தாம்பரத்தில் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் தனது 19 வயது மகனுடன் வசித்து வந்தார். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது கொலையாளி தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் அவர்கள் ஒன்றாக வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.

தனிப்படைகள் அமைப்பு மற்றும் தீவிர விசாரணை

மனிதக் கறி சமைக்கப்பட்ட பிரியாணி பாத்திரத்தைக் கைப்பற்றிய போலீசார், அதைச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்னமும் சடலத்தின் தலை கிடைக்காததால், அதைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஹைதுல் நிஷாவின் மகனிடம் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலையாளிகளின் செல்போன் சிக்னலை வைத்து, அவர்களைப் பிடிக்க ஒரிசா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இரண்டு தனிப்படைகள் விரைந்துள்ளன. மேலும் உத்தரப் பிரதேச ரயில்வே போலீசார், சென்னை ரயில்வே போலீசார் மற்றும் தாம்பரம் மாநகர காவல்துறையினர் இணைந்து கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.