அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் சொந்த கட்சி எம்.எல்.ஏ., - சிவகங்கையில் அரசியல் சர்ச்சை?
அமைச்சர் பங்கேற்ற அரசு விழா, எம்.எல்.ஏ. புறக்கணிப்பு? பல கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட திட்டங்கள் திறப்பு, சிவகங்கையில் அரசியல் பரபரப்பு.
கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற்காக கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு அரசு கட்டடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கனிமவளத்துறை அமைச்சர் பங்கேற்று கட்டடங்களை திறந்து வைத்த நிலையில், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. சிவகங்கை நகரில் 150 கல்லூரி மாணவியர் தங்கும் விடுதி ரூ.93,243 இலட்சம் மதிப்பிலும், கிருங்ககோட்டை, அமராவதிபுதூர் மற்றும் ஆலடிநத்தம் ஆகிய கிராமங்களில் தலா ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவு மையக் கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், உஞ்சனை அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.155 இலட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், காரைக்குடி சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியின் முதல் தளத்தில் ரூ.47.88 இலட்சம் மதிப்பில் கற்றல்–கற்பித்தல் கூடமும், சிவகங்கை நகரில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளின் முதல் தளங்களில் தலா ரூ.47.88 இலட்சம் மதிப்பில் கற்றல்–கற்பித்தல் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிறைவடைந்த கட்டடங்களின் திறப்பு விழா, திருப்பத்தூர் சாலையில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கனிமவளத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமைச்சருக்கு மாணவிகள் பூக்கள் வழங்கி உற்சாகமாக வரவேற்றதுடன், அவருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எம்.எல்.ஏ. பங்கேற்காதது ஏன்?
இதற்கிடையே, நிகழ்ச்சியில் சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி பங்கேற்கவில்லை. அரசு சார்பில் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. சிவகங்கை தொகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் எம்.எல்.ஏ., தொகுதியில் நடைபெற்ற முக்கிய அரசு நிகழ்ச்சியில், அதுவும் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் தொகுதி சார்ந்த அதிருப்தியா? அரசியல் கருத்து வேறுபாடா? அல்லது வேறு காரணமா? என்ற கேள்விகள் சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. ஒருபுறம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்ட நிலையில், மறுபுறம் தொகுதி எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை புறக்கணித்திருப்பது சிவகங்கை அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் வருகை... மாணவிகளின் உற்சாக வரவேற்பு... அரசு திட்டங்களின் திறப்பு... ஆனால் தொகுதி எம்.எல்.ஏ. ஆப்சென்ட் சிவகங்கை நிகழ்ச்சியில் அரசியலும் பேசுபொருளாகியுள்ளது.