சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி வாடிக்கையாளராக இணைந்தால் தனியாக உரையாடலாம் என அழைப்பு விடுத்ததாகக் கூறப்படும் 12 சமூக வலைதளக் கணக்குகள் மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இதுபோன்ற நடவடிக்கை முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் அஜீத் தாக்கோர் (29), கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், சமூக வலைதளங்களில் சிலர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி வாடிக்கையாளராக இணைந்தால் தனியாகப் பேசலாம், பழகலாம் என அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதுபோன்ற சமூக வலைதளப் பதிவுகள் 18 வயதுக்குக் குறைவான இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் வலியுறுத்தியிருந்தார்.
புகாரைப் பெற்ற சேலம் சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட சமூக வலைதளக் கணக்குகளுடன் வாடிக்கையாளர்களாக இணைந்தவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
புகார்தாரர் அஜீத் தாக்கோர் கூறுகையில், சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு இளம் வயதினரை ஈர்க்கும் வகையில் சிலர் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவுகளைப் பார்ப்பதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி வாடிக்கையாளராக இணையுமாறு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 18 வயதுக்குக் குறைவானவர்கள் இதுபோன்ற சேவைகளுக்காக பணம் செலுத்துவதற்காக தவறான வழிகளில் செல்லும் சூழல் உருவாகலாம் என்றும், இளம் பெண்களும் இதுபோன்ற பதிவுகளைப் பார்த்து, இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திற்கு தூண்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் திருச்சி சாதனா, த்ரிஷா குப்தா, ஹனி சென்னை, சூர்யபிரபா, அபிநயா பழனிசாமி, பிரியங்கா ராஜ், சரண்யா சந்தோஷ், ஐஸ்வர்யா, கீதா, தீபா, சிந்து மற்றும் பிரதீபா ஆகிய பெயர்களில் செயல்பட்டதாகக் கூறப்படும் 12 சமூக வலைதளக் கணக்குகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் உண்மையில் யார், அவர்களின் சமூக வலைதளச் செயல்பாடுகள் என்ன, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உள்ளடக்கங்கள், கட்டண அடிப்படையிலான தொடர்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.