வங்கதேசத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள ரங்க்பூர் மாவட்டப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆசிரியரான 65 வயதான கணபதி சக்ரவர்த்தி என்பவர் தனது மனைவி 50 வயதான பிரிதிலதா சக்ரவர்த்தி, அவர்களது மகள் 23 வயதான அகமி சக்ரவர்த்தி மற்றும் 12 வயது மகன் பிரியம் சக்ரவர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் குடும்பத்தினரின் மொபைல் போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது.
கடைசியாக பிரிதிலதாவின் தங்கை பூஜா சக்ரவர்த்தி 2 நாட்களாக தொடர்பு கொண்ட நிலையில் யாரும் எடுக்காததால் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி என்ன நிலைமை என பார்த்து வர அனுப்பியுள்ளார். அப்படியாக வந்த உறவினர்கள் முன்வாசல் பூட்டப்பட்டிருந்தையும், வீட்டினுள் இருந்த விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டதையும் கண்டனர். ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு 4 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கணபதி குடும்பம் அந்த பகுதியில் 4 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருப்பதும், அவர்களுக்கு யாருடனும் முன்பகை இல்லை எனவும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்படியிருக்கும்போது யார் இந்த 4 பேரையும் கொலை செய்தது என தெரியாமல் போலீசார் தவித்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்களின் சந்தேகப் பார்வை உறவினர்களான முக்தோ மற்றும் சித்தார்த்தா மீது திரும்பியது.
இருவரும் பக்கத்து வீடு வழியாக கணபதி வீட்டு மாடிக்கு சென்று அதிக போதை தரும் போதைப்பொருளான மெத்தம்பேட்டமைனை பயன்படுத்தியுள்ளனர். சத்தம் கேட்டு கணபதி மாடிக்கு சென்ற நிலையில் தாங்கள் மாட்டி விடுவோம் என நினைத்த முக்தோ மற்றும் சித்தார்த்தா இருவரும் தங்களிடம் இருந்த துண்டைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்தனர்.
தொடர்ந்து சத்தம் கேட்டு மாடிக்கு செல்ல முயன்ற கணபதியின் மனைவி பிரிதிலதாவை படிக்கட்டிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் மகள் அகமி மற்றும் மகன் பிரியம் ஆகியோரும் தங்களை காட்டிக் கொடுத்து விட வாய்ப்புள்ளது என கொலை செய்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் குற்றம் செய்த பிறகு துளியும் பயமில்லாமல் அவர்கள் ஆறு முதல் ஏழு மணி நேரம் அந்த வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்தனர். அப்போது போதைப் பொருட்கள், உணவை உட்கொண்டனர். வீட்டில் இருந்த பேரீட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு சர்வ சாதாரணமாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து அந்த வீட்டில் குளித்த அவர்கள், நகைகளையும் திருடி உருக்கியுள்ளனர். இதனால் தங்க நகையில் அனுபவம் வாய்ந்த ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தபோது தான் முக்தோ மற்றும் சித்தார்த்தா இருவரும் சிக்கியுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.