Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
க.சே.ரமணி பிரபா தேவி August 26, 2026 02:44 PM

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB, etc., போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல் குறித்து தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 800 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

’’TNPSC மற்றும் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர். தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

6 மாத காலத்துக்குப் பயிற்சி

தற்போது மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணிவரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

பயிற்சியில் சேரவிரும்பும் ஆர்வலர்கள் www.cecc.in என்ற இணையதள முகவரி வாயிலாக 26.08.2026 முதல் 16.09.2026 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்வதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் தலைவர்கூடுதல் தலைமைச் செயலாளர்/ பயிற்சித் துறை தலைவர் கூறி உள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.