மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 22 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இந்திரகுமார் (43) என்பவர், குறிப்பிட்ட சில ஆசிரியர்களை மட்டும் தனது ஆதரவாளர்களாக முன்னிறுத்திச் செயல்பட்டு வந்ததாகவும், மற்ற ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் வழங்காமல் புறக்கணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக ஒரு அணியாகவும், எதிர்ப்பாக மற்றொரு அணியாகவும் என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் மனக்கசப்புகள் காரணமாக ஆசிரியர்களுக்கு இடையே அவ்வப்போது விரும்பத்தகாத வாக்குவாதங்களும் மோதல் சம்பவங்களும் நடைபெற்று வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்களிடையேயான இந்த மோதல் போக்கின் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் ரீதியான புகார் ஒன்று எழுப்பப்பட்டது. இச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவில், அந்த ஆசிரியர் மீதான பாலியல் புகார் முற்றிலும் பொய்யானது என்றும், உள்நோக்கத்தோடு சோடிக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இப் புகார் விவகாரம் தொடர்பாகத் துறை சார்ந்த மேலதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் தொடர்ந்து நேரடி விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பங்கேற்றுப் சாட்சியமளித்த மாணவிகளைத் தலைமை ஆசிரியர் இந்திரகுமார் கடுமையாகத் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், தலைமை ஆசிரியரின் கோபத்திற்கும் மிரட்டலுக்கும் ஆளான பிளஸ் டூ பயிலும் 16 வயது மாணவி ஒருவர், தலைமை ஆசிரியரின் செயலுக்குப் பயந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மாணவி பள்ளிக்குச் செல்லாததைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரைப் பள்ளிக்குச் செல்லுமாறு வலிறுத்தியுள்ளனர். தலைமை ஆசிரியரின் மிரண்டால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த மாணவியைக் கண்ட அருகில் இருந்தவர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் கொடூர சம்பவம் குறித்துத் தகவலறிந்த பூம்புகார் காவல் துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கும் பள்ளிக்கும் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் வாக்குமூலம் மற்றும் சக மாணவிகளின் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்.
மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மாணவியை மிரட்டிய பொறுப்பு தலைமை ஆசிரியர் இந்திரகுமார் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட இரு ஆசிரியர்கள் என மொத்தம் மூன்று ஆசிரியர்களை உடனடியாகப் வேறு பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவி ஆசிரியருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.