ஆட்சியில் அமர்ந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பொதுச்செயலாளர் என்றாலும் தன்னுடைய நீர்வளத்துறையில் தான் நினைத்தது எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார் புஸ்ஸி ஆனந்த். அதற்கு காரணம் அந்த துறையின் புதிய செயலாளர், பிரசாந்த் வடநரே. புஸ்ஸி தரப்பு எதை சொன்னாலும் அதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி, முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார் வடநரே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இரண்டு பெரிய துறைகளுக்கு ஒரே செயலாளர்
ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை என்ற முக்கியமான இரண்டு பெரிய துறைகளுக்கு ஒரே செயலாளராக வடநரே இருப்பதால், தான் வைத்ததுதான் சட்டம் என்ற நினைப்பில் அவர் செயல்படுவதாகவும், புஸ்ஸி ஆனந்த் சொல்லும் பணிகளை, பணியிடமாற்றங்களை கூட அவர் செய்ய மறுப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்களில் காரசாரமாக பேசி வருகின்றனர்.
சத்தியபிரதாசாஹூவை காலி செய்த பழைய டீம்
ஏற்கனவே, நீர்வளத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்ட சத்தியபிரதாசாஹூ, கடந்த திமுக ஆட்சியில் ஊழல் செய்து கொட்டம் அடித்த பல பேரை சிபாரிசுகளையெல்லாம் ஓரங்கட்டி, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு முக்கியமில்லாத பதவிகளுக்கு தூக்கி அடித்தார். அதன்பின்னர், சத்தியபிரதாசாஹூவால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உதவியாளர் உமாபதியின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து துறை செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரியான சத்தியபிரதாசாஹூவையே கட்டம் கட்டி தூக்கியடிக்க வைத்திருக்கிறார்கள்.
கூட்டணி கட்சிகளின் சிபாரிசுகளால் நடந்த டிராஸ்ஃபர்கள்
குறிப்பாக, நீர்வளத்துறையில் டிரான்ஸ்பர் செய்ததில் பல்வேறு நிர்வாக குளறுபடி நடந்ததாக கூறிதான், துறை செயலாளராக நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே சத்தியபிரதாசாஹூ பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அந்த பணியிடமாற்றங்கள் எல்லாம் தவெக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பரிந்துரையில் நடந்தவைதான் என்றும், கூட்டணி கட்சித் தலைவர்களின் பரிந்துரை கடிதங்களுடன் வந்து டிரான்ஸ்பர் கேட்கும் பொறியாளர்களுக்கு பணியிடமாறுதல் போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள் அந்த துறையின் ஊழியர்கள். ஆனால், இதில் துறையின் செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டதாக செய்தித்தாள் உள்ளிட்டவைகளில் திட்டமிட்டு எழுதவைத்து அவரையே காவு வாங்கியிருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல்.
நல்லதை கூட செய்ய முடியவில்லையே என அமைச்சர் வேதனை
இப்போது துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் வடநரே முதல்வரின் முக்கிய அதிகாரியின் நம்பிக்கைக்குரியவர் என்பதால், அவரை கேட்காமல் எந்த மாற்றமும் பணிகளும் துறையில் நடப்பதில்லையாம். குறிப்பாக, அமைச்சர் புஸ்ஸி ஆனந்தே நேரடியாக சொன்னாலும் கூட அது செய்ய முடியாது, சிக்கல் வரும் என முட்டுக்கட்டை போடுகிறாராம். இதனால், இந்த துறையில் நல்லதை கூட செய்யமுடியவில்லை என அமைச்சரே புலம்பி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்
காவிரி விவகாரத்தில் கவனமில்லாத செயலாளர் ?
காவிரி விவகாரமும், மேகதாது அணை பிரச்னையும் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இதை கவனமாக கையாண்டு சிக்கல்களை தீர்க்க வேண்டிய நீர்வளத்துறைக்கு முழுமையாக செயலாளரை போடாமல், ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருக்கும், பிரசாந்த் வடநரேவையே நீர்வளத்துறைக்கும் செயலாளராக, முதல்வரின் முதன்மை அதிகாரியின் சிபாரிசில் போட்டிருப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகிறதாம். பல கோப்புகள் ஒப்புதலுக்காக செயலாளர் அறையில் காத்துக் கிடந்தும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம் பிரசாந்த் வடநரே. காவிரி விவகாரம் இரு மாநிலங்களிலும் கந்தக கிடங்காக எப்போது வேண்டுமானாலும் பற்றி எரியும் தருவாயில் இருக்கும் நிலையில், அதில் துறை செயலாளர் பிரசாந்த் வடநரே அலட்சியமாக இருப்பதாகவும், அதுவும் நாளை மறுநாள் மேட்டூர் அணையை முதல்வர் விஜயே நேரடியாக சென்று திறக்கவிருக்கும் நிலையில், இதன் முக்கியத்துவத்தை வடமாநில அதிகாரியாக இருக்கும் பிரசாந்த் வடநரேவால் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார்கள் அந்த துறையின் சீனியர்கள்.
கடந்த ஆட்சி அதிகாரிகளின் ஆட்சி, அதிகாரிகள் தான் அமைச்சர்களை இயக்குகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போதைய தவெக ஆட்சியும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குசென்றுகொண்டிருப்பதாகவும், புதிய அமைச்சர்களில் பலரை அவர்கள் ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொள்ளாமல் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.