பிரபாஸைத் தொடர்ந்து யாஷ்.. பான் இந்திய ஸ்டார்களுக்கு சாபமாக மாறிய பிரம்மாண்ட வெற்றி
ராகேஷ் தாரா August 26, 2026 06:44 PM

 

பாகுபலி வெற்றிக்குப் பிறகு பிரபாஸும், கேஜிஎஃப் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு யாஷும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்தனர். அதற்கு முன்பு இருவரும் தங்களது திரையுலகப் பயணத்தில் அளவான பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடித்து வந்தனர். இருவருக்கும் அப்போது இன்றைய அளவிலான சந்தை மதிப்பும், சூப்பர்ஸ்டார் அந்தஸ்தும் கிடையாது.

ஒரே படத்தில் உச்சம் தொட்ட பிரபாஸ் மற்றும் யாஷ்

ஒரே திரைப்படம் ஒரு நடிகரின் ஒட்டுமொத்த மார்க்கெட்டையே மாற்ற முடியும் என்பதற்கு பிரபாஸ், யாஷ் இருவரும் முக்கிய உதாரணங்கள். பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படமும் இந்திய அளவில் கவனம் பெற்றது. அதேபோல் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் யாஷுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின. இதன் விளைவாக இருவரது அடுத்தடுத்த படங்களின் பட்ஜெட்டும் பல மடங்கு உயர்ந்தது.

பான் இந்திய வெற்றி : சாதனையா ? சாபமா?

ஆனால் இந்த உயர்வு அவர்களுக்கு புதிய சவாலையும் உருவாக்கியது. பெரிய நட்சத்திரமாக மாறிய பிறகு குறைந்த பட்ஜெட் படங்களைத் தேர்வு செய்வது கடினமானதாக அமைந்தது. பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் வெளியான ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களும் பாகுபலி உருவாக்கிய எதிர்பார்ப்புக்கு இணையான வரவேற்பை பெறவில்லை. சலார் வர்த்தக ரீதியாக நல்ல வசூலை பதிவு செய்தாலும், பிரபாஸின் முந்தைய வெற்றிகளுடன் ஒப்பிடும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

கலவையான விமர்சனங்களைப் பெறும் டாக்சிக்

இதே நிலை தற்போது யாஷுக்கும் உருவாகியுள்ளது. கேஜிஎஃப் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்துள்ள முக்கியமான படமான டாக்சிக் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷுடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யாஷ் இதில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தந்தை ராயா மற்றும் மகன் ரூமி என்ற கதாபாத்திரங்கள் கதையின் மையமாக உள்ளன. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வெளியான முதல் நாளிலேயே யாஷின் நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் காட்சியமைப்புக்கு பாராட்டு கிடைத்தாலும், திரைக்கதை, படத்தின் நீளம் மற்றும் வேகம் தொடர்பாக கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

என்ன செய்ய போகிறார் யாஷ் ?

கேஜிஎஃப் மூலம் உருவான பான் இந்திய சந்தையை அடுத்தடுத்த படங்களிலும் தக்கவைத்துக்கொள்வது யாஷுக்கு முக்கியமான சவாலாக மாறியுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட் மட்டும் போதாது என்பதை சமீபத்திய நிலவரம் உணர்த்துகிறது. நட்சத்திரத்தின் மீது உருவாகும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு கதை, கதாபாத்திரம் மற்றும் படத்தின் உருவாக்கம் அமைய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இனி யாஷ் தேர்வு செய்யும் கதைகள் அவரது அடுத்த கட்ட பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். கேஜிஎஃப் உருவாக்கிய உச்சத்தை மீண்டும் எட்டுவதற்கான அவரது அடுத்த நகர்வு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த படங்களில் அவர் எடுக்கும் முடிவுகள், அவரது சந்தை மதிப்பு எந்த திசையில் செல்லும் என்பதையும் தீர்மானிக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.