தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் நேற்று இரவு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தாய்லாந்திலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தனியார் பயணிகள் விமானத்தின் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுற்றுலா விசாவில் மும்பையிலிருந்து தாய்லாந்து சென்று திரும்பிய சுமார் 40 வயதுடைய இரு வடமாநிலப் பெண்கள், தாய்லாந்திலிருந்து நேரடியாக மும்பை செல்லாமல் சென்னைக்கு வந்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் குடியுரிமைச் சோதனையை முடித்து, தங்களின் சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு, சுங்கத் தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறி 'கிரீன் சேனல்' வழியாக வெளியேற முயன்றனர்.
சந்தேகத்தின் பேரில் அவர்களை நிறுத்தி சுங்க அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து அவர்களின் சூட்கேஸ்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது, போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே சூட்கேஸ்களைத் திறந்து சோதனையிட்டதில், 7 பார்சல்களில் மொத்தம் 6 கிலோ எடை கொண்ட உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த ஹைட்ரோபோனிக் கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.6 கோடியாகும். போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 2 வடமாநிலப் பெண்களையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் "கடத்தல் குருவிகளாக" செயல்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள முதன்மை நபர்கள் யார் என்பது குறித்து சுங்கத்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.