'தாடி எடுக்க முடியல..பதில் சொல்ல மாட்றாங்க...' பென்ஸ் படக்குழு குறித்து நிவின் பாலி புகார்
ராகேஷ் தாரா August 26, 2026 06:14 PM

நடிகர் நிவின் பாலி, ‘பென்ஸ்படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போவதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தோற்றத்தை மாற்ற முடியாமல் இருப்பதாகவும், படக்குழுவினரை தொடர்புகொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பக்கியராஜ் கண்ணன் இயக்கும்பென்ஸ்படத்தில் ராகவா லாரன்ஸ், ரவி மோகன் மற்றும் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸுடன் தொடர்புடைய படம் என்பதால் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு உள்ளது. நிவின் பாலி இதில் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார்.

நிவின் பாலி வருத்தம் 

பென்ஸ் படத்தின் அறிவிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானது . படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. பென்ஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது வரை தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடையவில்லை என நடிகர் நிவின் பாலி பகிர்ந்துள்ளார். 

சமீபத்தில் மலையாள பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிவின் பாலி பென்ஸ்படத்துக்கான தனது ஒப்பந்தம் காரணமாக கடந்த இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான தாடி தோற்றத்தில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டிருப்பதால், அடுத்தடுத்த படங்களுக்கான தோற்றத்திலும் மாற்றங்களைச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. படக்குழுவினரை பலமுறை அழைத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், தனது நிலைமையைப் புரிந்துகொண்டு படப்பிடிப்பை முடிப்பதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

100 கோடி வசூலித்த பெத்லகேம் குடும்ப யூனிட்

இதற்கிடையே நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியானபெத்தேலேகம் குடும்ப யூனிட்ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கிரிஷ் ஏ.டி. இயக்கிய இப்படத்தில் நிவின் பாலியுடன் மமிதா பைஜு நடித்துள்ளார். ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான இப்படம் வெளியான சில நாட்களிலேயே வசூலில் வேகமெடுத்தது. ஐந்தாவது நாள் முடிவில் உலகளவில் ரூ.93.90 கோடி வசூல் செய்திருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பை நெருங்கியுள்ளது.

நிவின் பாலியின் அடுத்த முக்கியமான தமிழ் படமாக இயக்குநர் ராம் இயக்கியுள்ளஏழு கடல் ஏழு மலைஉள்ளது. இதில் நிவின் பாலியுடன் அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ளதுடன், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.