புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவை கோரியுள்ளது. சிபிஐ வேட்பாளர் சலீம், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவு வட்டாரங்களை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானது. இதையடுத்து தற்போது தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் அசோக் ஆனந்த் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான திமுகவும் தனது வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சிபிஐ சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சலீம் நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு சென்ற சலீம், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தவெக முழு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், தனது ஆதரவு கோரிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கும் வகையில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்திடம் ஆதரவு கடிதத்தையும் சலீம் வழங்கியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தவெக கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காத நிலையில், புதுச்சேரியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சிபிஐ நேரடியாக தவெகவிடம் ஆதரவு கோரியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாகியுள்ளது. தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் சிபிஐ வேட்பாளர் தவெகவின் ஆதரவை நாடியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் தவெக தங்களுக்கு பின்புலமாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை எதிர்கொண்டு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றும் சலீம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் சிபிஐ விடுத்துள்ள அதிகாரப்பூர்வ ஆதரவு கோரிக்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ வேட்பாளர் சலீமின் கோரிக்கையை தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது தேர்தலில் வேறு நிலைப்பாட்டை எடுப்பார்களா? என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் ஏற்கனவே ஆளும் கூட்டணி, திமுக மற்றும் சிபிஐ என போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், தவெகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.