கேரள மாநிலம் திருவனந்தபுரம் மலையின்கீழில் 16 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளவூர்க்கல் பகுதியைச் சேர்ந்த இவானா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாய் கிரிஸ்டியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிஸ்டி மற்றும் அவரது கணவர் அபிஜித்தின் நான்காவது திருமண ஆண்டு தினம் நேற்று. குடும்பத்தில் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய நாளில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. தனிப்பட்ட சந்தேகமே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையை கொலை செய்த பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள கிரிஸ்டி திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொலை சம்பவம் நடைபெற்ற உடனேயே, அபிஜித்தின் உறவினர் ஒருவர் எதிர்பாராதவிதமாக வீட்டிற்குள் வந்ததால் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை உடனடியாக திருவனந்தபுரம் எஸ்.ஏ.டி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தை உயிரிழந்ததை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரிஸ்டியை காவலில் எடுத்துள்ள மலையின்கீழ் போலீசார், கொலைக்கான காரணம், சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
16 மாத பச்சிளம் குழந்தையின் கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.