விழுப்புரம் : கலைஞர் கட்டிய கட்டிடத்தையே சட்டமன்றமாக பயன்படுத்தலாம்.. மிசா கொடுமைகளைஎளிமையாக, சிறுமைப்படுத்தி கடந்துப் போகக்கூடாது. ஒன்றிய அரசின் திட்டங்களை, கொள்கைகளை தவெக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் எதிர்க்கிறது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 64 பேர் ரத்தம் வழங்கினர். இந்த ரத்ததான முகாமை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடங்கி வைத்து ரத்தம் கொடுத்தவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.,
கலைஞர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் தற்போது இருபது சதவீதம் தான் மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தையே சட்டமன்றமாக பயன்படுத்தலாம். தற்போதுள்ள சட்டமன்றமும் சிறப்பாக தான் உள்ளது. முதல்வர் பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்கத்தான் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்தால் அது பலருக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும். எனவே இத்தகைய பயணங்களை நாம் வீண் என்று சொல்ல முடியாது.
இந்திய ஜனநாயக வரலாற்றில் அவசரநிலை காலம் என்பதும், அப்போது நடந்த அத்துமீறல் என்பதும் ஒவ்வொருவரும் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவசர நிலை குறித்து ராகுல் காந்தியிடம் கேட்டால் கூட அப்போது நடந்த கொடுமைகளை அவர் ஆதரித்து பேச மாட்டார். இந்திய ஜனநாயகத்தின் மாறாத வடுவாக உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், அரசியலில் உள்ள ஒவ்வொருவரும் இத்தகைய அத்துமீறல்களில் இருந்து பாடத்தை கற்பது அவசியம். அதனை எளிமையாக, சிறுமைப்படுத்தி கடந்துப் போகக்கூடாது.
ஒன்றிய அரசின் திட்டங்களை விமர்சிப்பது, கொள்கைகளை விமர்சிப்பதற்கு பல்வேறு விதமான அணுகுமுறைகள் உள்ளன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வெளிப்படையாக, கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைக்குள்ள அரசு அதே கொள்கைகளை சட்டப்பேரவையில் தீர்மானங்கள் மூலம் அதனை எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். எனவே அவர்கள் அதனை எதிர்க்காமல் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. என தெரிவித்தார்.