இலக்கிய மேடைகளில் குடும்ப நகைச்சுவையை கொண்டுவந்தவர்.,.சாலமன் பாப்பையாவின் வாழ்க்கை பயணம்
ராகேஷ் தாரா September 11, 2026 05:44 PM

தமிழறிஞரும், பேராசிரியரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா 90 வயதில் மதுரையில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 11-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் பேச்சுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எளிய குடும்பத்தில் பிறந்தவர்

சாலமன் பாப்பையாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் சுந்தரம் - பாக்கியம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய நெசவாளர் குடும்பத்தில் ஒன்பதாவது மகனாக வளர்ந்த அவர், சிறு வயதிலேயே பேச்சு மற்றும் நாடகங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் பயிற்சி வகுப்புகள் தனது மேடைப் பயணத்துக்கு அடித்தளமாக அமைந்ததாக சாலமன் பாப்பையா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பள்ளி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகள் மற்றும் நாடகங்களில் பங்கேற்ற அவர், பின்னர் கல்லூரி மேடைகளிலும் தொடர்ந்து பேசினார்.

கல்வியும் பேராசிரியர் பணியும்

அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த சாலமன் பாப்பையா, மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பயின்றார். பின்னர் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் விரிவுரையாளராக தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி, பின்னர் துறைத்தலைவராகவும் உயர்ந்தார். 1961 முதல் பல ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்த அவர், மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தையும் பேச்சுக்கலையையும் கொண்டு சென்றார்.

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதில் இடம்

கல்லூரியில் பணியாற்றிய காலத்திலேயே சாலமன் பாப்பையாவின் பேச்சுத் திறமை பரவலாக அறியப்பட்டது. எட்டையபுரம் பாரதி விழாவில் அவர் ஆற்றிய உரை அவரது மேடைப் பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. அதன் பின்னர் குன்றக்குடி அடிகளார் தலைமையிலான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இலக்கியம் மட்டுமே பேசப்பட்ட பட்டிமன்ற மேடைகளில் குடும்பம், உறவுகள், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கை சார்ந்த தலைப்புகளையும் விவாதத்துக்குள் கொண்டு வந்தார். நகைச்சுவையுடன் கருத்துகளை எடுத்துச் சொல்லும் பாணி அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கியது. இதன் மூலம் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பொதுமக்களிடம் இன்னும் நெருக்கமாகக் கொண்டு சென்றார்.

இலக்கியப் பங்களிப்பு

பேச்சாளராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் சாலமன் பாப்பையா செயல்பட்டுள்ளார். திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை’, ‘உரை மலர்கள்’, ‘உரை கொத்து’, ‘திருக்குறள் உரையுடன்உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் குறித்த விளக்கங்களை வழங்கியதன் மூலம் இலக்கியத்தை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சென்றார்.

திரைப்படங்களிலும் நடிப்பு

பட்டிமன்ற மேடையையும் இலக்கிய உலகையும் தாண்டி திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ளார். ஷங்கர் இயக்கியமுதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘சிவாஜிஉள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். குறிப்பாகசிவாஜிபடத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலமானவை.

விருதுகளும் அங்கீகாரங்களும்

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கான அவரது நீண்டகால பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு 2000-ம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. பின்னர் 2021-ம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. பட்டிமன்ற நடுவர் என்ற அடையாளத்துடன் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் நபராகவும் அவர் குறிப்பிடப்பட்டார்.

குடும்ப வாழ்க்கை

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயபாய் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் காலமானார். அதன் பின்னர் குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், 90 வயதை எட்டிய சாலமன் பாப்பையா சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 11-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல தலைமுறைகளுக்கு தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் கொண்டு சென்ற அவரது குரல், இனி நினைவுகளிலும் அவர் விட்டுச் சென்ற படைப்புகளிலும் தொடர்ந்து ஒலிக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.