ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
குலசேகரன் முனிரத்தினம் September 15, 2026 12:44 PM

DMK MK Stalin: திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்டதை ஒன்றாக கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி அக்கட்சி சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முப்பெரும் விழா இன்று நடைபெற இருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று திட்டமிடப்பட்டு இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?

வழக்கமாக முப்பெரும் விழாவின் போது அண்ணா நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதை, திமுக தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால், இன்று காலை உதயநிதி மட்டுமே அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருந்தார். ஸ்டாலின் அங்கு வரவில்லை. இதனால் ஸ்டாலின் ஏன் வரவில்லை, என்ன காரணம் என பல கேள்விகள் எழுந்தன. இதையடுத்து அறிவாலயம் சார்பில் வெளியான தகவலின்படி, லேசான அசௌகரியம் காரணமாகவே ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரவில்லை என கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழாவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.