ஆஸ்திரேலியாவில் 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது போல, இந்தியாவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பெரியபாளையம் அருகே ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வேல்ஸ் கல்விக் குழுமத்தில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு 1000 ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வில், பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக நிகழ்வில் பேசிய சௌமியா அன்புமணி, இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்களில் 97% பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என்றும், சொந்த விவரங்களை பொது தளத்தில் பதிவிடுவதால் சமூக வலைதளங்கள் மூலம் அதிக தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்றார்.
பெற்றோர்களை காட்டிலும் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை மாணவர்கள் கேட்டு கொள்வார்கள் என்பதால் தினந்தோறும் பாடவேளையில் செல்போன், சமூக வலைதளங்களில் ஏற்படும் பாதிப்புகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார். தற்போதைய கால கட்டத்தில் ஆண் பிள்ளைகள் 12 வயதில் மது குடிக்க ஆரம்பிக்கின்றனர் எனவும், 8 வயது பெண் பிள்ளைகளுக்கும் தற்போது தொந்தரவுகள் வர ஆரம்பித்துள்ளன என்றார். ஆஸ்திரேலியாவில் 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது போல இந்தியாவில் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அன்புமணியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தானும் பேசி உள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது மாணவர்களுக்கு கெட்ட பழக்கங்களுக்கு No சொல்வதை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், Moral science பாடம் தற்போது குறைந்து விட்டது எனவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சௌமியா அன்புமணி கூறினார்.