வேலை வாங்கித்தருவதாக ரூ.12 லட்சம் மோசடி... 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
Dinamaalai October 24, 2024 11:48 AM

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பால்ராஜ் (55) என்பவரிடம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விளத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரசுவாமி மகன் வரதராஜன் (62) என்பவர் அறிமுகமாகி, கடந்த 2021ம் ஆண்டு பால்ராஜின் மகனுக்கு சென்னை துறைமுகத்தில் தோட்ட மேலாளர் வேலை வாங்கித் தருவதாக பால்ராஜிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.12 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். 

இது குறித்து கடந்த 06.04.2024 அன்று பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு-I போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எதிரி வரதராஜனை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் IVல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேர சுந்தர் நேற்று குற்றவாளியான வரதராஜனுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு-I காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.