சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த மாணவி..!
Top Tamil News October 24, 2024 12:48 PM

திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு 55 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது.

இந்நிலையில் மாநகரப் பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பரபரப்பாக செல்லக்கூடிய சாலைகளில் மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலைகளில் தெரியும் மாடுகளால் தொடர் விபத்துகளும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு வித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனால் நெல்லை மாநகராட்சியிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில் முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் இருந்தபோது சாலையில் சுற்றி தரியும் மாடுகளை சிறை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வந்தபர்.

ஆனால் தற்போது புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதில் சுனக்கம் காட்டியதன் விளைவாக மாநகர பகுதியில் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

நெல்லை 55 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி பலத்த காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் மாநகரப் பகுதியில் தொடர்கதை ஆகி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


 


 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.