Diwali: தீபாவளி நாளில் செய்ய வேண்டியவை; கூடாதவை - எளிய வழிகாட்டல்
Vikatan October 30, 2024 02:48 PM
தீபாவளி நாளில் செய்ய வேண்டியவை; கூடாதவை! எளிய வழிகாட்டல்!காரணமில்லாமல் எந்தவொரு சாஸ்திர சம்பிரதாயத்தினையும் உண்டாக்கி வைக்கவில்லை நம் முன்னோர்கள். சரி. இனி தீப ஒளித் திருநாளின் அம்சங்களைப் பார்ப்போமா..?

பொதுவாக தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் என்ற அளவிலே முடிந்து விடக்கூடிய  ஒருநாள் பண்டிகைக் கொண்டாட்டமாகவே நம்மில் பெரும்பாலோனோர் கருதுகின்றோம். ஆயினும் அதனையும் தாண்டி பல நிலைகளில் கொண்டாடப்படும் ஆன்மிக முக்கியத்துவம் உடைய பண்டிகையாக தீபாவளி விளங்குகின்றது என்பதைப் பார்க்கலாம்..!

தீபாவளி

ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து இருளை அகற்றி ஒளியை ஏற்றுவிப்பதே இப்பண்டிகையின் தாத்பரியம்.  நமது நாட்டைப் பொறுத்தவரை ஐப்பசி மற்றும் கார்த்திகை ஆகிய இரண்டு மாதங்களும் கடும் மழைப்பொழிவினைத் தரக்கூடியன. நீண்ட இரவு நேரம் உடைய பருவ காலங்கள் இவை. நுண்ணுயிர்கள் பரவுகின்ற காலகட்டமும் கூட. 

அறிவியல் ரீதியாக இக்காலநிலையில் ஓடுகிற நீரில் அதிகாலையில் குளிப்பது உடல்நலத்திற்கு உகந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான்  ஆற்றில் புனித நீராடுவதை துலாஸ்நாநம் என்ற பெயரில்  கட்டாயமாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். அதே சமயத்தில்  நோய்க்கிருமிகளால் தொற்றுகள் பரவும் அபாயத்தினைத் தவிர்ப்பதற்காக அன்றாட வழக்கங்களிலும் சில விஷயங்களை ஆன்மிகத்தின் பெயரால் புகுத்தி வைத்தனர். 

விளக்கீடு செய்தல், பட்டாசு கொளுத்துதல், சொக்கர்பனை ஏற்றுதல், கார்த்திகைப் பொறி சுற்றுதல் என  சுற்றுப்புறத்தினை கதகதப்பாகவும்; வெளிச்சமாகவும்  வைத்துக்கொண்டதுடன் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்கிவைத்தனர். கூடுதலாக இவைகளினால் நோய்க்கிருமிகள் பரவாமல் அழிந்தொழிந்தன.  பொதுவாக மழைக்காலத்தில் மனிதவுடலில் இரும்பு மற்றும் புரதச்சத்து குறைவு ஏற்படுவது இயற்கை . இதனையும் வெல்லம் மற்றும் பருப்புகள் சேர்த்த பட்சணங்களை சாப்பிட்டு இயற்கையான முறையில் சரிசெய்து கொண்டனர்.  எனவே காரணமில்லாமல் எந்தவொரு சாஸ்திர சம்பிரதாயத்தினையும் உண்டாக்கி வைக்கவில்லை நம் முன்னோர்கள். சரி. இனி தீப ஒளித் திருநாளின் அம்சங்களைப் பார்ப்போமா..?

தனத் திரயோதசி: 

தீபாவளித் திருநாளுக்கு முந்தைய திரயோதசி அமைகிற தினமானது தனத்திரயோதசி ஆகும். திரயோதசி என்பது ஒரு பட்சத்தில் அமைகிற பதிமூன்றாவது திதி ஆகும். இந்நாளில் சந்தியா காலத்தில் விளக்குகளை ஏற்றித் திருமகளை வழிபட வேண்டும். லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்நன்னாளை  வட இந்தியாவில் தந்தேரஸ் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். வீட்டின் எட்டுத் திசைகளிலும் விளக்குகளை ஏற்றி ஒளிர்வித்திட வேண்டும். எந்தவொரு பகுதியையும் இருட்டாக வைத்திருக்கக்கூடாது என்பது சாஸ்திரம்.

தன்வந்திரி பகவான்

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது திருமகளுடன் தொடர்புடைய  அவளது அம்சங்கள் பொருந்திய பலவும் தோன்றின. காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் எனும் குதிரை , அலக்ஷ்மீ எனப்படும் மூத்ததேவி, லக்ஷ்மி எனப்படும் திருமகள் இவர்களுடன் மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரிபகவானும்  தோன்றியதாக புராணங்கள் பேசுகின்றன. அமிர்தகும்பம் மற்றும் மருத்துவச்சுவடிகளுடன் தோன்றிய இந்த தன்வந்திரி பகவானே மருத்துவக் கடவுளாகப் போற்றப் படுபவர்.  நாம் உட்கொள்ளும் மருந்துகள் முழுவீரியத்துடன் செயல்பட்டு வியாதி குணமடைவதற்கு இவரது அருள் தேவை. 

தீபாவளி மருந்தினை நிவேதித்தல் என்கிற சம்பிரதாயம் இவருக்குரியது ஆகும். தனத்ரயோதசி அன்று மாலையில் தன்வந்திரி பகவான் சந்நிதிகளில் விளக்கேற்றி வழிபட  பிணிகளற்ற வாழ்வு கிடைத்திடும். அன்றைய தினம் பிரதோஷ காலமாகவும் அமைவது சிறப்பு. வைத்தியநாதாஷ்டகம், நாராயணீயம் போன்ற ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்திட நாட்பட்ட வியாதிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.  இயன்றவர்கள் வைத்தியநாதர், மருந்தீஸ்வரர் போன்ற பிணியகற்றும் பெருமான் உறைந்தருளும்  ஆலயங்களுக்குச் சென்று பிரதோஷ வழிபாட்டினைச் செய்யலாம். கஜலட்சுமி சந்நிதிகளில் நெய் தீபமேற்றி வணங்கிடுவது சிறப்பு.  

நரக சதுர்த்தசி:

நரகாசுரன் அழிந்த தினமான சதுர்த்தசி தினத்திற்கு 'நரகசதுர்த்தசி' என்பது பெயர். 

(சதுர்த்தசி - பதினான்காவது நாள்). 

இது தீபாவளி அமாவாசைக்கு முந்தைய தினமாக அமைகிறது.  இத்தினத்தில் கங்கையானவள் சகல நீர்நிலைகளிலும் உறைவதாக ஐதீகம். எனவே அதிகாலையில் புண்ணிய நீராடி இறைவழிபாடு செய்வதுடன் பசு வழிபாடு செய்வது அவசியம். இதனால் தேவர்கள் பித்ருக்கள் ஆகிய இருவரின் ஆசிர்வாதமும் ஒருங்கே கிடைத்திடும். சகல பாபங்களும் கழியும். இயன்ற அளவு தானதர்மங்கள் செய்வது அதீத நற்பலன்களை வாரி வழங்கிடும்.  புத்தாடைகள், இனிப்புப் பண்டங்கள், பலகாரங்கள், நல்ல எண்ணெய், சிகைக்காய் மற்றும் ஸ்நாநப் பொடி, மஞ்சள் போன்ற லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருட்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக திருமகளின் அருளை நீங்காதிருக்கச்  செய்யலாம். 

தீபம்

அந்தி நேரத்தில்  இல்லங்களிலும் ஆலயங்களிலும் தீபங்களை ஏற்றி பிரகாசிக்கச் செய்வதன் மூலம் லட்சுமிகடாட்சம் நிலைத்திடும்.  வீட்டின் மிக உயரமான இடத்தில்  ஒரு ஸ்தம்பத்தில் விளக்கினை ஏற்றி தெற்கு முகமாக வைக்க வேண்டும். இத்தீபத்திற்கு யமதீபம் என்பது பெயர்.  மத்தாப்புகளை கொளுத்திக் காட்டுதலும் தொன் சம்பிரதாயமே. இதன்மூலம்  யமலோகத்திலிருந்து பித்ரு லோகத்திற்குச் செல்லும் நமது மூதாதைகளுக்கு வழிகாட்டுவதற்காக வெளிச்சம் உண்டாக்கித் தருவதாக ஐதீகம்.  ஆதிகுடிகள்  உயரமான முகடுகளில் நின்றுகொண்டு தீயூட்டப்பட்ட நீளமான குச்சிகளைச் சுழற்றி  பித்ருக்களுக்கு வழிகாட்டியதாக சொல்லப்படுகிறது அதன் நீட்சியே இன்றைய மத்தாப்பு சுற்றும் பழக்கம் என்பதாக அறிகின்றோம். 

சுடுநீரிலும்,  நல்லெண்ணையிலும் அன்றைய பொழுதில் லட்சுமி உறைவதாக ஐதீகம். ஆதலால் பின்னிரவு கழிந்தவுடன் சூரியோதயத்திற்கு முன்பாக நல்லெண்ணெய்க் குளியல் செய்வது அவசியம் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.  

தீபாவளி  அமாவாசை:

தீபாவளியும் அமாவாசையும் அடுத்தடுத்த தினங்களில் அமைவது வழக்கம். சிலசமயங்களில் ஒரே தினத்தில் அமைந்து விடுவதும் உண்டு.  புண்ணியம் தந்திடும் ஐப்பசி அமாவாசை தினத்தில் நதிகளில்  புண்ணிய நீராடி தர்ப்பணங்கள்  செய்து முன்னோர்களுக்கு வழிபாடாற்றுதல் அவசியம். ஏனெனில்  அன்றைய தினத்தில்தான் பித்ருக்கள் தங்களுடைய பித்ருலோகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லுகின்றனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.  எனவே அன்றைய தினம் தங்களது வாரிசுகளால் அளிக்கப்படும் உடவினை ஏற்றுக்கொண்டு அவர்களை மனமகிழ்வுடன் ஆசிர்வதித்துச் செல்வதாக ஐதீகம்.  இன்றைய தினத்தில் செய்யப்படும் பசுவழிபாடும்; தானதர்மங்களும் அளப்பரிய புண்ணிய பலன்களைத் தரவல்லன. 

கேதாரகௌரீ விரதம்

கேதாரகௌரீ விரதம்:

அன்றைய தினம் விரதமிருந்து அந்தி வேளையில் கேதார நோன்பினை பூர்த்தி செய்வது மரபு. கோதுமை அப்பம் அல்லது அதிரசம், தோசை, பாயசம்,  வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, நோன்பு சரடு  என எல்லாமே 21 என்ற எண்ணிக்கையில் வைத்து வழிபட்டு வாழ்வரசிகளுக்கு மங்களத் தாம்பூலம் அளித்து பிரார்த்தனை செய்து கொள்வது சிறப்பு. ஆலமரத்தினையும் ; பசுவினையும் வலம் செய்து வணங்கிட மாங்கல்யபலம் நிலைத்திடும்.

பலிபாட்டிமா:

பாட்டிமை என்பது  ஒரு பட்சத்தின் முதல் தினமான பிரதமை திதியைக் குறிக்கும். ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் அமைகிற பிரதமை தினமே பலிபாட்டிமா .மகாபலி எனும் அரசன் பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வரும் தினம் அது என்பதால் பலிபாட்டிமா என்று அழைக்கப்படுகிறது.

மகாபலி எனும் அசுரகுல அரசன் தனது தவசக்தியால் சகல தேவர்களையும் கட்டுக்குள் வைத்திருந்தான்.  இதனால் திருமகளான லட்சுமி வேறெங்கும் செல்லவியலாமல் அவனது நாட்டிலேயே நிலைத்து இருந்ததால் அவனது ஆட்சிப்பகுதி மட்டும் அதீத  சுபிட்சமாக இருந்தது .மற்ற நாடுகள் லட்சுமி கடாட்சம் இல்லாமல் வறுமைப் பட்டு அழிந்தன. இந்நிலையில் திருமாலானவர் வாமன அவதாரம் செய்து மகாபலியை பாதாளத்தில் அமிழ்த்தி லட்சுமியை விடுவித்தார். 

தவறுணர்ந்து  திருமாலிடம் மன்னிப்பு வேண்டிய அவன் பாதாள அரசனாக வாழ்வதாக புராணம்.  ஆயினும்  அவனது விருப்பப்படி  வருடத்திற்கு ஒருமுறை பூமிக்கு வந்து தனது மக்களை பார்த்து விட்டு செல்வதாக வரம் பெற்றான்.  அன்றைய தினம் பூக்கின்ற பூக்கள் யாவும் மகாபலி ராஜாதான் என்பது நம்பிக்கை.  அந்த தினம்தான் பலிபாட்டிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இன்றைய தினத்தில் பூக்களால் செய்யப்படும் வழிபாட்டால் நிரந்தரமான  லட்சுமி கடாட்சத்தினைப் பெறலாம். 

யம த்விதியை:

ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து அமையும் இரண்டாவது தினமே 'யமத்விதியா' என அழைக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் யமலோகத்தில் இருக்கக் கூடிய நமது உறவினர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.  வீட்டில் அசுப நிகழ்வுகள் காரணமாக பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தவிர்த்தவர்கள் இன்றைய தினத்தில் பசுவழிபாடு செய்து தானங்களை அளிக்க அதீத புண்ணிய பலன்கள் கிடைக்கும். 

தீபாவளி சாஸ்திரம்

செய்ய வேண்டியவை:

தீபாவளியை ஒட்டிய மேற்கூறிய  ஐந்து தினங்களுமே  நமது பாவங்களைப் போக்கி அளப்பறிய நற்பலன்களை அள்ளித்தரும்  தினங்களே. எனவே இத்தினங்களில் இயன்றவரை நதிகளில் அதிகாலை  நீராடுதல், அந்தி நேர வழிபாடு, தீபங்களை ஒளிர்வித்தல், பித்ருக்களையும்; பசுக்களையும் வழிபடுதல், தானதர்மங்கள் செய்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க நன்மைகள் பெருகிடும். 

செய்யக்கூடாதவை: 

பழைய துணிகளை யாருக்கும் அளிக்கக் கூடாது. பழம்பொருட்களையும், முறம்  துடைப்பம் முதலியவற்றையும் தீயிலிடுவதோ; தூக்கி எறிவதோ கூடாது. அப்படிச்செய்தல் மூத்த தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் நமது நாட்டில் நிலவிடும்  தொன் நம்பிக்கை.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.