இளைஞர் எரித்துக்கொலை... காட்டுப்பகுதியில் உடல் மீட்பு; போலீஸ் விசாரணை!
Dinamaalai October 30, 2024 04:48 PM

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காட்டுப்பகுதியில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே குமாரகிரி கிராமம் காட்டுப் பகுதியில் நேற்று காலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அந்த வழியாக விவசாய வேலைக்கு சென்றவர்கள் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜா, வசந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

அங்கு பிணமாக கிடந்தவர், உடல் முழுவதும் தீயில் எரிந்து கருகிக் கிடந்தது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜாண், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்தனர். அங்கு கிடந்த தடயங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மநபர்கள் வேறு எங்காவது வைத்து அவரை கொலை செய்து விட்டு அதிகாலை நேரத்தில் காரில் குமாரகிரி காட்டுப் பகுதியில் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 38 வயது முதல் 43 வயது வரை இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து எட்டயபுரம் வட்டார பகுதியில் சமீபத்தில் யாரேனும் காணாமல் போனார்களா? என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். எனவே, கொலை செய்யப்பட்டவர் உள்ளூரை சேர்ந்தவரா? அல்லது வெளியூரை சேர்ந்தவரா?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காட்டுப் பகுதியில் வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.