இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா செவ்வாய்க்கிழமை வெளியான ஐசிசி மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்து தனது சிறந்த ஆட்டத்திற்காக வெகுமதியை பெற்றுள்ளார்.
தீப்தி ஷர்மா தற்சமயம் நடைபெற்று வரும் தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தற்போது முதல் இடத்தில் இருக்கும் ஒருநாள் பந்துவீச்சாளரான இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனை நெருங்கியுள்ளார்.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் நிகழ்ந்து வரும் ஒயிட்-பால் தொடரிலும் தனது ஃபார்மை தொடர்கிறார்.
தொடக்க இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தீப்தி ஷர்மா இந்தியாவின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக இருக்கிறார். இரண்டு ஆட்டங்களில் மூன்று விக்கெட்டுகளை எடுத்துள்ள தீப்தி ஷர்மாவின் ஆட்டத்தில் அவர் விட்டுக்கொடுத்த ரன்களின் சராசரி விகிதம் 3.42.
தரவரிசையில் நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்களும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். லியா தஹுஹு மூன்று இடங்கள் முன்னேறி 12வது இடத்தையும், அமெலியா கெர் ஒரிடம் முன்னேறி 13வது இடத்தையும், சோஃபி டெவின் 9 இடங்கள் முன்னேறி 30வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த தொடரின் முடிவுகள் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் விளையாட்டு வீரர்களின் வலுவான செயல்திறனை பிரதிபலிக்கிறது.
இந்திய வீரரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு நாள் தொடரின் பேட்டர் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 30வது இடத்தை அடைந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடரின் பேட்டர்கள் தரவரிசையில், சோஃபி டெவின் மூன்று இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே நேரத்தில் அமெலியா கெர் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சக நியூசிலாந்து பேட்டர்களான சுசி பேட்ஸ் மற்றும் மேடி கிரீன் ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். பேட்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 15வது இடத்தை அடைந்துள்ளார். கிரீன் ஏழு இடங்கள் முன்னேறி 18வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில், தீப்தி ஷர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், நியூசிலாந்தின் சோஃபி டிவைன் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்
.