ஒரு விவாகரத்து என்னவெல்லாம் செய்யும்? இப்படி அநியாயமாக 35 பேரின் உயிரை பலி வாங்கியிருக்கிறது. இத்தனைக்கும் ஆயுள் வளர்க்கவும், ஆரோக்கியம் காப்பதற்காகவும் அத்தனைப் பேரும் கர்ம சிரத்தையாக உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தவர்கள்.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷூஹாய் விளையாட்டு மையம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள சாலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 35 பேர் பலியாகினர்.43 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர சம்பவத்தின் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சீன போலீஸ் அதிகாரிகள் “தென்கிழக்கு சீனாவில் உள்ள மக்காவ்க்கு அருகிலுள்ள குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஜுஹாய் விளையாட்டு மையத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கார் ஓட்டி வந்த 62 வயது நபர் தான் இந்த பிரச்னைக்கு காரணம். கார் சாலையில் தாறுமாறாக ஓடியதில் 35 பேர் அதே இடத்தில் பலியாகினர்.
43 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓடும் பாதைக்கு வெளியே சிலர் தரையில் பலத்த காயத்துடன் கிடக்கும் அந்த வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
படுகாயம் அடைந்தவர்களில் பலர் உடற்பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் பாதையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் என தெரியவந்தது. நடந்த சம்பவம் குறித்து பேன் என்ற 62 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேண்டுமென்றே மோதினாரா, விபத்தா என்பது உடனடியாகத் தெரியவில்லை.