உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள சர்தானா பகுதியில் உள்ள கலிந்தி கிராமத்தை சேர்ந்தவர் தஹ்சீன். இவர் அப்பகுதியில் பால் வியாபாரியாக உள்ளார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் சாஹில் தனது தந்தைக்கு பால் வியாபாரத்தில் உதவுகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சாஹில் பால் வியாபாரம் செய்வதற்காக அருகில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார்.
அப்போது மார்க்கெட்டில் மஷ்ரபே, கைஃப், சோஜ்ரப், கம்ரான் ஆகிய நால்வருடன் சாஹல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.சம்பவத்தன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை, சாஹலுடன் சண்டையிட்ட நால்வர் உட்பட ஒன்பது பேர் கொண்ட கும்பல், சாஹிலைத் தாக்க துப்பாக்கியுடன் அவரது வீட்டிற்கு வந்தனர். கும்பலிடம் இருந்து காப்பாற்றுவதற்காக தஹ்சீன் தனது மகன் சாஹிலை மாடிக்கு அழைத்துச் சென்றார். அவரது 8 வயது சகோதரி ஆஃபியாவும் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
அப்போது, ஒன்பது பேர் கொண்ட கும்பல் சாஹிலை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. ஆனால் புல்லட் தவறுதலாக ஆஃபியாவை தாக்கியது. இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. சுடப்பட்ட தனது மகள் ஆஃபியாவை மீட்ட தஹ்சீன், அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஃபியா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.